Thursday, November 21, 2013

தனியார் பங்களிப்புடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கதா?

நன்மையே தரும்
தனியார் உதவியுடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளை அமைப்பது சமுதாயத்திற்கு நன்மையே தரும். "தமிழ் மெல்ல அழியும்' என்று ஒரு சிலர் கூப்பாடு போடுவார்கள். இப்படித்தான் 1960களில் தமிழுக்கு இந்தியால் ஆபத்து என்று பொய்ப் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி ஒரு தலைமுறையையே இந்தி படிக்காமல் செய்து ஆங்கிலம் வளர    மறைமுகமாக பல்லக்கு தூக்கினார்கள்.
இன்று அரசியல்வாதிகளின் வீட்டுக் குழந்தைகளில் எத்தனை சதவீதம் பேர் தமிழ்வழி அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கிறார்கள்? மாதிரிப் பள்ளிகள் மூலம் மொழித்திறன், பொது அறிவு, விஞ்ஞான ஆக்கத் திறன் இவையெல்லாம் மேம்படுமே தவிர குறையாது. கல்வி விஷயத்தில் அடுத்த தலைமுறையைப் பற்றி மட்டுமே சிந்தித்தால் போதும்.
பழ. கவிதா சிவமணி, புன்செய் புளியம்பட்டி.

ஏற்புடையதல்ல
அரசே நடத்த வேண்டிய கல்வித்துறையை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ள காரணத்தால், இப்போதே எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து நிலையிலான படிப்புகளும் தனியார் மயமாகி, கல்வி என்பது கொள்ளை லாபம் பெறும் தொழிலாக மாறியுள்ளது. கட்டணக் கொள்ளையில் சிக்கி பெற்றோர் தவியாய் தவித்துக் கொண்டுள்ளனர். இவை போதாதென்று, மத்திய அரசும் தன் பங்கிற்குத் தனியாரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, மாதிரிப் பள்ளிகளைத் திறக்க முயற்சிப்பது மாநில அரசுகளின் பட்டியலில் உள்ள கல்வியை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியாகும். எனவே, தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருப்பது ஏற்புடையதல்ல.
கே. வேலுச்சாமி, தாராபுரம்.
தேசிய ஒருமைப்பாடு
மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளை மாநிலங்களில் தோற்றுவிப்பது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு மதிப்பளிப்பதாகும். ஆனால், இவற்றில் தனியார் பங்களிப்பு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும். ஏற்கெனவே தனியார் மெட்ரிக் பள்ளிகளால் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மாதிரிப் பள்ளிகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பது யானை தன் தலையில் மண்ணைப் அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். மாதிரிப் பள்ளிகளை மாநில அரசுகளே ஏற்று நடத்துவதுதான் சரியானது.
அ. சம்பத், கோயம்புத்தூர்.

கலப்படம் கூடாது
தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கதல்ல. அது மாநில அரசுடைய அதிகாரத்தை குறைக்கும் செயலாக மாறலாம். மாநில மொழி உரிமையைக் கூட படிப்படியாக அதனால் இழக்க நேரிடலாம். நாளடைவில் தனியார் பங்களிப்பு பெருகலாம். மத்திய அரசு தன் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகலாம். கல்வியை வளர்ப்பதில் மாநில அரசுக்கே முழுமையான உரிமை இருப்பது மிகவும் முக்கியம். கலப்படம் என்பது உணவில் மட்டுமல்ல, கல்வியிலும் ஆபத்தானது.
வலங்கொண்டான், சேலம்.

சற்றும் சந்தேகமில்லை
முழுதும் அரசுடைமையாக உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் இப்போது எங்ஙனம் உள்ளது? விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டு நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளும் மிக சுமாராகவே உள்ளன. அரசு கல்விக்கூடங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தனியார் பங்களிப்புடன் பள்ளிகள் துவங்கப்பட்டால், செயல்திறன், கல்வியின் தரம் ஆகியவை சிறப்பாகவே இருக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும், அவர்கள் தரமான கல்வி பெற்று சிறந்தவர்களாக வாழ்வில் உயர்வார்கள். ஆகையால் தனியார் பங்களிப்பு நன்கு வரவேற்கத்தக்கதே!
க.மா.க. விவேகானந்தம், மதுரை.

எதிர்க்கப்பட வேண்டியது
அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை எதிர்பார்க்காது, சேவை மனப்பான்மையில் செலவு செய்யப்பட வேண்டிய துறைகளுள் ஒன்று கல்வித்துறை. ஆனால், தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு "ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா' எனும் மாதிரிப் பள்ளிகளை ஆரம்பிக்கப் போகிறோம் என அறிவித்து இருப்பது கல்வியை சேவைப் பட்டியலில் இருந்து வணிகப் பட்டியலுக்கு தடம் மாற்றும் முயற்சி. வளர்ந்த பகுதிகளில் ஏற்கெனவே தனியார் பள்ளிகள் ஏராளமாய் இருக்க மீண்டும் தனியார் ஒத்துழைப்புடன் மாதிரிப் பள்ளிகளை கொண்டு வருவது, சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில அரசு பள்ளிகளையும் பாழாக்கும் முயற்சி.
முழுமையாக அரசு செலவில் அரசே நடத்தினால் மட்டுமே அது ஒரு முன்மாதிரிப் பள்ளியாக இருக்கும். இல்லையேல் அது மக்களை கல்வி முதலாளிகளிடம் விற்கும் முயற்சியே. எனவே மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் திட்டம் வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியதே.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இந்தித் திணிப்பு கூடாது
சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்ததிலிருந்தே பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டன. தனியார் பள்ளிகள் இதை வைத்துக் கொண்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு தொடங்க இருக்கும் மாதிரிப் பள்ளிகளின் பாட திட்டத்தில் இந்தி திணிப்பு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும். மற்றபடி இதனால் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வாய்ப்புண்டு. தனியார் பங்கேற்பு எந்த அளவிற்கு உதவும் என்பது போக போகத்தான் தெரியும். முற்றிலும் தனியார் வசம் போய் விடாமல் மத்திய அரசு கட்டுப்பாட்டை தன் வசம் வைத்திருப்பது நலம்.
கே. சீனிவாசன், திருவையாறு.

மூக்கை நுழைக்க வேண்டாம்
தனியார் பங்களிப்பு என்றாலே, பாடமொழி தாய்மொழியாக இருக்காது. ஆங்கில வழி என்றால் போட்டி தவிர்க்க முடியாதது. சேர்க்கைக்குப் போட்டி என்றால் அங்குக் கல்லா பெட்டி கல்விதான் களை கட்டும். மத்திய அரசு கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு வழங்கி அதன்மூலம் கல்விப் பணியை ஊக்குவித்தால் அது தாய்மொழி வளர்ச்சிக்கு உதவும்; கல்வியும் கடைச்சரக்கு ஆகாது. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடற்ற சமச்சீர் கல்வி உறுதிப்படும். எனவே மாநில அரசின் வரம்பிற்குள் வரவேண்டிய கல்வியில், தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கி தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது முறையல்ல.
செ. சத்தீயசீலன், கிழவன் ஏரி.

பலன் கிடைக்கும்
இன்றைய நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பது கண்கூடு. வணிக நோக்குடன் தனியார் பள்ளிகள் செயல்பட்டாலும் கல்வித்தரம் அங்கே அதிகம். அரசு  தனியார் பங்களிப்புடன் மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதன் மூலம் குறைந்த கட்டணத்தில்  நல்ல கல்வி அங்கு கிடைக்கும். இந்த திட்டம் சிறப்பாக செயல்படும். இதனால் பெற்றோரும் மாணவர்களும் பலனடைவார்கள் என்பது உறுதி. இதை வரவேற்போம்.
என். சண்முகம், திருவண்ணாமலை.

வரவேற்போம்
மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளை அமைத்தால், அதுவும் தனியார் பங்களிப்பு என்றால் நிர்வாகம் தயவுதாட்சண்யமின்றி சிறப்பாக அமையும். நாடெங்கும் ஒரே பாட திட்டம் என்பதால் இப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்பிற்காக அல்லது வேலைவாய்ப்பிற்காக தயக்கமின்றி நாடெங்கும் செல்ல முடியும். இந்த வாய்ப்பை அரசியலையும் கடந்து, அடுத்த தலைமுறையின் நலன் கருதி நாம் வரவேற்றே ஆக வேண்டும்.
ந. தமிழ்க்காவலன், திருவாரூர்.

கைவிடப்பட வேண்டும்
தற்போதுள்ள கல்வி நிறுவனங்களை குறை நீக்கி மேம்படுத்த முயன்றிடாமல் மத்திய அரசின் பிடியில் லாபநோக்குடைய முதலாளிகளின் நலன் காக்க மாடல் பள்ளிகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிப்பது ஒருவகையில் சர்வாதிகாரமே. இலவசமாக மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்க, அதற்கு மாறான முறையில் கல்வியை வியாபாரமாக்கி வருவதை நாம் ஏற்றால் கேடுகளே விளையும். எனவே மாடல் பல்ளி திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
கோவைச்சித்தர், ஸ்ரீரங்கம்.





No comments:

Post a Comment