Monday, November 04, 2013

பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்!

பள்ளியில் பிரார்த்தனையின்போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி
நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளவர் சஞ்சய் சால்வே. இவர் புத்த மதத்தை பின்பற்றுபவர். காலையில் பள்ளிப் பிரார்த்தனையின்போது இவர் கைகூப்பாமல் நின்றார். மேலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது தனது கையை முன்புறம் நீட்ட மறுத்தார். இதனை ஒழுங்கீனமாக கருதி பள்ளி நிர்வாகம் அவருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தரவில்லை. இதனை எதிர்த்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை விசாரித்த அதிகாரி, பள்ளி நிலைப்பாட்டை நிராகரித்தார். ஆசிரியருக்கு பதவி உயர்வும் அதன் அடிப்படையில் ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை பள்ளி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் சால்வே வழக்கு தொடர்ந்தார்.

பிரார்த்தனையில் தான் தவறாமல் கலந்துகொண்டபோதிலும், அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மதரீதியான அந்த செய்கையின்போது கை கட்டுவதில்லை என்று அவர் வாதிட்டார்.

பள்ளி நிர்வாகமும் கல்வி அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டது:

சஞ்சய் சால்வேயின் பணி ஆவணங்களை பரிசீலித்தபோது, ஆசிரியராக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரார்த்தனையின்போது அவரது நடத்தை ஒழுங்கீனமாக கருதப்பட்டது தெரியவருகிறது.

ஆனால், பிரார்த்தனை பாடலைப் பாடுவது, கை கூப்புவதை ஆகியவற்றை கட்டாயப்படுத்த முடியாது என்ற கல்வி அதிகாரியின் முடிவு சரியானதே. அதே சமயத்தில், பள்ளியின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், பள்ளி நிர்வாகம் அவரது பதவி உயர்வை இறுதி செய்து, புதிய ஊதியத்தின் அடிப்படையில் அவருக்குச் சேர வேண்டிய தொகையை 2 மாதங்களில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment