கோவை: கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக, உதவி தலைமையாசிரியர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை, தீத்திபாளையம், அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களை,நேற்று முன்தினம், அங்குள்ள கோவிலுக்கு சுற்றுலா அழைத்து சென்று திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து, 7ம் வகுப்பு மாணவி, ரஞ்சிதா உயிரிழந்தார். விபத்து குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், ஏழு ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் ஆகியோரிடம், நேற்று விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறியதாவது:
விபத்து குறித்த தெளிவான தகவல்கள், விசாரணைக்கு பின், சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்
அனுமதி பெறாமல், சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த, பள்ளி உதவி தலைமையாசிரியர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் கூறுகையில், ""பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் என்பதால், தேசிய குழந்தை தினத்தை கொண்டாடும் வகையில், அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றோம். நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது,'' என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment