Monday, November 11, 2013

மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்!


"வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைவருக்கும் தரமான கல்வி என்பது வரவேற்கத்தக்கது. 40 சதவீதம் அரசு, 60 சதவீதம் தனியார் என்ற ஒதுக்கீட்டில் கல்வியை வியாபாரமாக்கும் "ராஷ்டிரிய ஆதர்ஸ்" எனும், மாதிரி பள்ளி கல்வித் திட்டம் ஏற்புடையதல்ல.

இப்பள்ளிகளுக்கு, மாநில அரசு இடம் தந்து விட்டு, ஒதுங்கி கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் 90 சதவீதம், தனியார் நிர்ணயிக்கும் நிலையால், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில வழிக்கல்வி முறையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.

மூன்று முறை நடந்த 2 லட்சம் பேர் பங்கேற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், 46 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். கொள்குறி வகை தேர்வு முறையிலான இத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். கடந்த 2004ல் அமல்படுத்திய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 54 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.35 ஆயிரம் கோடி யாருக்கும் பயனின்றி உள்ளது.

இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து டிச.20ல் டில்லியில் பார்லிமென்ட் முன் தர்ணா நடத்த உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment