Tuesday, November 05, 2013

கண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள்

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் 13 பஞ்.,யூனியன்களில் 79 பள்ளிகளில் எங்கள் அமைப்பு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.இதில் 43 சதவீத பள்ளிகளில் குடிநீர் இல்லை. 63 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. 65 சதவீத பள்ளிகளில் தனித் தனி வகுப்பறை வசதிகள் இல்லை. 61 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், 37 சதவீத பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவும், 29 சதவீத பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களும் இல்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரிய, ஆசிரியைகளும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், தனித்தனி வகுப்பறைகள், இட வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம், சுற்றுசுவர், நூலக வசதிகளை செய்ய வேண்டும். பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு முறையாக செயல்படுத்த வேண்டும். மோசமான நிலையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்க்கும் கல்வி முன்னேற்றத்தை அடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் பரதன், பொற்செழியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment