"ஆங்கில பாடத்தை சிறிது முயற்சியுடன் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்க முடியும்" என்று ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்கினர்.
டி.வி.ஆர்., அகாடமி சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பொள்ளாச்சியில் நடந்தது. இதில் நேற்று காலை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களுக்கும் கோவை ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு டிப்ஸ்களை வழங்கினர்.
சிவகாமி(தமிழ்): தமிழ் தேர்வினை அடித்தல் திருத்தலின்றி எழுத வேண்டும். கட்டுரை மற்றும் நெடுவினா மற்றும் துணைப்பாட வினாக்களை எழுதும்போது, முன்னுரை, உட்தலைப்பு மற்றும் முடிவுரை உள்ளிட்ட தலைப்புகள் இட வேண்டும். ஐந்து திணைகளையும், திருக்குறளில் நான்கு அதிகாரத்தையும் படிக்க வேண்டும். குறைந்த நேரத்தில் அதிக மதிப்பெண் கொடுக்கக்கூடிய சரியான விடை, கோடிட்ட இடம் நிரப்புக, இலக்கணக்குறிப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முதல் மூன்று துணைப்பாடங்களை படித்தால் போதுமானது.
நாடகங்கள் எழுதும்போது, ஐந்து காட்சிகள் வருமாறு எழுத வேண்டும். ஆனால், நாடகத்தை கதையாக எழுதக்கூடாது. அனைத்து சிறுகதையிலும் உள்ள கதைமாந்தர், கற்பனை போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
டெய்ஸி (ஆங்கிலம்): தமிழ்வழி மாணவர்கள், ஆங்கில பாடத்தை சிறிது முயற்சியுடன் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்க முடியும். எழுத்துப்பிழை அதிகமாக இருந்தால், மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. கடைசி ஐந்தாண்டுகளின் கேள்வித்தாள்களை படித்தால், பின்தங்கிய மாணவர்கள் எளிதில் அதிக மார்க் வாங்கலாம்.
கடிதம் எழுதும்போது, அனுப்புனர், பெறுனர், முகவரி உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிக்கும் மதிப்பெண் உண்டு. அதனால், தவறாது அனைத்தும் எழுத வேண்டும். முக்கியமாக, தமிழ் வார்த்தைகளை, ஆங்கில எழுத்துகள் போட்டு எழுதக்கூடாது. சரியான ஆங்கில வார்த்தைகளை மட்டுமே எழுத வேண்டும். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில், சாய்சில் விட வேண்டிய கேள்விகளுக்கும் விடையளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேகலா (கணிதம்): சிறிது முயற்சியும், அடிப்படை அறிவும் இருந்தால் கணிதத்தில் முழுமதிப்பெண் எளிதாக வாங்கலாம். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு, முதலில் பதில் அளிக்கவும். அனைத்து கணக்குகளையும், திரும்ப திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடு-26; வெக்டர் இயற்கணிதம்-38; கலப்பெண்கள்-26 என, மதிப்பெண்ணில் அத்தியாயத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளவும்.
பகுமுறை வடிவக்கணிதம் மற்றும் வகை நுண்கணிதம் பயன்பாடு-2 போன்றவற்றில் உள்ள, பத்து மதிப்பெண் வினாக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். வரையறுத்த தொகையில் உள்ள பயிற்சி கணக்கான 7.4 மற்றும் 7.5; வகைக்கெழு சமன்பாடுகள், தனிநிலை கணக்கியல், நிகழ்தகவு பரவல் உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சரவணக்குமார் (இயற்பியல்): சரியான திட்டமிடலும், முயற்சியும் இருந்தால் இயற்பியலில் சென்டம் அடிக்கலாம். சமன்பாடு கேள்விகளை, ஒன்றன்பின் ஒன்றாக நம்பர் கொடுத்து விடையளிக்க வேண்டும். 10 மதிப்பெண் வினாவிற்கு, ஒன்று, நான்கு, ஆறு, எட்டு மற்றும் பத்தாம் பாடம்; ஐந்து மதிப்பெண் வினாவிற்கு, இரண்டு மற்றும் ஏழாம் பாடத்தை படித்தால் போதுமானது. மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு, விளக்கம், விதி, வரையறை, பயன்கள், பண்புகள் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும். அனைத்துப்பாடங்களிலும் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு படிக்க வேண்டும்.
தேர்வில் விடையினை அடித்தல் திருத்தலின்றி எழுத வேண்டும். தினந்தோறும் 10 மதிப்பெண், ஐந்து மதிப்பெண், மூன்று மதிப்பெண் என, ஒரு வினா வீதம் படித்து எழுதி பார்த்து படித்தால், சென்டம் வாங்க முடியும்.
சாந்திதேவி(வேதியியல்): வேதியியல் பாடத்தை, எழுதிப்பார்த்து படிக்க வேண்டும். அனைத்து பாடங்களிலும் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் படிக்கவும். வினாக்களுக்கு விடை அளிக்கும்போது, "கீ-பாயிண்ட்&'டுக்கு அடிக்கோடிட்டு காட்டவும்.
வேதிப்பண்புகளை ஒப்பிட்டு படித்து, எழுதி பார்த்துக்கொள்வது சிறந்தது. ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் நேம் ரியாக்சனை ஒப்பிட்டு படிக்கவும். நன்றாக தெரிந்த ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வினாக்களுக்கு, முதலில் எழுத வேண்டும்.
புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களிலும் இருக்க கூடிய வரையறை, விதிகள், அலகுகள் போன்றவை மூன்று மதிப்பெண் வினாக்களாக வரும். வேறுபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பாயிண்டு... பாயிண்டாக எழுதணும். குறைந்த நேரத்தில் அதிக மதிப்பெண் எடுக்க கூடிய வினாக்களை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.
சாந்தி- தாவரவியல்: ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டுமென்றால், அனைத்து பாடங்களையும் நன்றாக படிக்க வேண்டும். முதல் ஐந்து பாடங்களிலிருந்து மூன்று மதிப்பெண் வினாக்களும்; 2,3,4,5,6 ஆகிய பாடங்களில், ஏதேனும் மூன்று பாடங்களை படித்தால், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கலாம்.
நெடுவினா கேட்கக்கூடிய 1,2,4,5 ஆகிய பாடங்களில், மூன்று பாடங்களை படித்தால் போதும். நெடுவினா எழுதும் போது, தலைப்பு, படம் வரைந்து, பாகங்களை குறிக்க வேண்டும். முழு மதிப்பெண் எடுக்க கூடிய சுழற்சி வினாக்களை தேர்வு செய்து எழுதினால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
வரையறை, வேறுபாடு, பயன்கள் உள்ளிட்ட வினாக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வினாக்களுக்கு விடையளிக்கும் நேரத்தை பிரித்துக்கொண்டு, தேர்வெழுத வேண்டும்.
சுமதி-விலங்கியல்: விலங்கியல், தாவரவியல் என இரண்டிலிருந்து விருப்பமான பகுதியை தேர்வு செய்து முதலில் எழுத வேண்டும். வினாக்கள் படிக்க வழங்கப்படும் நேரத்தில், எந்தந்த வினாக்களுக்கு பதில் அளிப்பது என முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பாயின்ட்... பாயின்டாக எழுதும் வினாக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டு பத்து மதிப்பெண் வினாக்களுக்கு அரைமணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.
விடைத்தாளில், பதிலளிக்கும் போது, நடுவில் படங்களை தெளிவாக வரைந்து, பாகங்களை குறிக்கணும். படங்கள் அழகாக இருக்கணும் என்ற அவசியமில்லை; பாகங்கள் தெளிவாக குறிக்க வேண்டும். அறிவியல் பெயர்களை புரிந்து படிக்க வேண்டும்.
கிருத்திகா- கம்ப்யூட்டர் சயின்ஸ்: முதல் தொகுதியில் (வால்யூம்), ஐந்து மார்க் கேள்விகள் கேட்கப்படும். 2வது தொகுதியில், எர்ரர் கண்டுபிடித்தல், வெளியீடுகள் போன்றவையிலிருந்து கேள்விகள் கேட்க வாய்ப்புகள் அதிகம். இரண்டாம் தொகுதியில், 7,8,9 பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும்.
தொகுதி ஒன்றில், 8 மற்றும் 9ம் பாடங்களிலிருந்தும்; தொகுதி இரண்டில், 1,2,5,6,10,11,12 பாடங்களிலிருந்து (சேப்டர்) ஐந்து மதிப்பெண் கேள்விகள் வராது. 75 வினாக்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கலாம். ஓஎம்ஆர் ஷீட்டில் மட்டுமே விடையளிக்கவேண்டும்.
டிக் அடிப்பது, கோடுபோடுவது இல்லாமல், "ஷேடு" செய்யவேண்டும். கமாண்ட், புரோகிராம் போன்றவையிலிருந்து ஐந்து மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். சி++ யிலிருந்து தினமும் ஒரு புரோகிராம் எழுதிப்பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் 8 புரோகிராமாவது தெரிந்திருக்க வேண்டும்.
உஷா ராணி (பொருளியல்): பொருளியலில் மொத்தமுள்ள 12 பாடங்களில், 4,7,8,10 பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கலாம். முதல் பிரிவில், புத்தகங்களின் பின் கொடுக்கப்பட்ட கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்தல் வேண்டும்.
2ம் பிரிவில் எட்டாம் பாடத்தை விட்டு, மீதமுள்ள பாடங்களில் உள்ள கேள்விகளை படித்தால், 60 மதிப்பெண்களை எளிதில் பெற முடியும். இப்பிரிவில் 3 "பாயிண்டுகள்" இருக்க வேண்டும். அடுத்த பிரிவுக்கு 7,10,12 பாடங்களை படித்தால் ஆறு கேள்விகளுக்கும் எளிதில் விடையளிக்க முடியும்.
கடைசி பிரிவில் 3,4,8ம் பாடங்களை படித்தால் நிச்சயமாக மூன்று கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். கேள்வி எண்ணை சரிவர எழுத வேண்டும். வரைப்படங்களை தெளிவாக போட வேண்டும். மேற்குறிப்பிட்ட "டிப்ஸ்" கொண்டு தேர்வுக்கு தயார் செய்தால் சதம் அடிப்பது எளிது.
வித்யாடோயல் (வணிகவியல்): மற்ற பாடங்களை ஒப்பிடும் போது, வணிகவியல் பாடத்தில் சதம் எடுப்பது கடினமாக மாணவர்கள் நினைகின்றனர். கடின முயற்சி இருந்தால் நிச்சயம் சதம் எடுக்க முடியும். வேறுப்படுத்துதல் வகை கேள்விகளுக்கு முக்கியத்துவம் வழங்கி படிக்க வேண்டும்.
மொத்தமுள்ள 8 பாடங்களில் முதல் ஐந்து பாடங்களை படித்தால் 175 மதிப்பெண்களை எளிதில் பெற முடியும். ஒரு மதிப்பெண் கேள்விகளில், மொத்தமுள்ள 40 மதிப்பெண்களில் 35 கேள்விகள் புத்தகத்தின் பின்னால் இருந்து கேட்கப்படுகின்றன. "எடுத்துக்காட்டு" பகுதியை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில், நெடுவினாக்களுக்கு விடையளிக்கும் போது குறிப்பு சட்டம் போட்டு எழுதினால் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கீதா (கணக்கு பதிவியல்): ஒரு மதிப்பெண் கேள்விகளில் கணக்குகள் கேட்டால், உடனடியாக பதிலளிப்பதை தவிர்த்து, கணக்கு போட்டு சரிபார்த்த பின் பதிலளிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் கேள்விகளில், கணக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கலாம்.
"விளக்கமளிக்க" கேள்விகளை நன்கு படிக்க வேண்டும். சூத்திர கணக்குகளில் சூத்திரங்களை முதலில் எழுத வேண்டும். தேய்மான கணக்குகளில் கணக்கீடு போட்டு பதில்களை எழுத வேண்டும். விகித ஆய்வுக்கணக்குகளை முடிந்த வரை சுருக்கி எழுத வேண்டும். தொடர் பயிற்சி இருந்தால் நிச்சயமாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும். வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள எண்களை சரி பார்த்து கவனத்துடன் எழுத வேண்டும். கணக்கீடுகளை போட்டு பயிற்சி எடுக்க வேண்டும்.
பாலசுந்தர் (வணிக கணிதம்): ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும், புத்தகத்தின் பின் கேட்கப்படுவதால் அதை நன்றாக படிக்க வேண்டும். நீள்வட்டம் பிரிவில் குவியம், மையம் உள்ளிட்ட பகுதிகளை நன்றாகப்படித்தால் 20 மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்.
10ம் பாடத்தை நன்றாக படித்தால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும். 7,10ம் பாடங்களில் கணக்கீடுகள் அதிகம் இருப்பதால் தேர்வுகளில் இந்த வகை கணக்குகளை தவிர்க்க வேண்டும். நேரம் விரயமாவது தவிர்க்கப்படும்.
6ம் பாடத்தில் ஆறு மதிப்பெண் கேள்விகள் அதிகம் கேட்கப்பட வாய்ப்புள்ளது. 9.2 பயிற்சியில் இருந்து ஒரு கேள்வி நிச்சயம் கேட்கப்படும். இப்பாடத்தேர்வை சரியாக இரண்டரை மணி நேரத்தில் முடிக்க முடியும். முதல் 10 நிமிடங்களை சரியாக திட்டமிட்டால் நல்ல மதிப்பெண் நிச்சயம்.
No comments:
Post a Comment