2013 அக்டோபர் 31-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ‘பள்ளிக்குப் படையெடுக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள்: இந்தியாவுக்கே பாடம் புகட்டும் கன்னியாகுமரி’ என்னும் செய்தி,
அரசின் அவசர காலக் கவனிப்புக்கு உரியது.
இன்று வட மாநிலத்தவர் கூலிகளாகத் தமிழகத்துக்கு வரும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் புலம்பெயர்தல், கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன்னால் அடிமைகளாகவும், 19-ம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாகவும் தமிழர்கள் உலகிலுள்ள பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்தப் புலம்பெயர்வுகளால் தமிழர்கள் இன்றுவரை சந்திக்கும் சமூக, பொருளாதார, அரசியல், மொழி மற்றும் கல்வி சார்ந்த சவால்கள் பல்வேறு பரிமாணங்களில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் விவாதிக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறே, வேலைதேடி, இன்று சத்தமின்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறும் வட மாநிலத்தவரும் அவரது சந்ததியினரும் காலப்போக்கில் இத்தகைய சவால்களுக்கு விதிவிலக்காக இருக்க முடியாது. மாநில அரசும் மத்திய அரசும் தனிக் கவனம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
முன்மாதிரியாக கன்னியாகுமரி
அடிப்படைக் கல்வி நிலையில் இந்தக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சவாலை ஏற்றுள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், இதே பிரச்சினையை எதிர்கொள்ளும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மொழியுணர்வு, சிறுபான்மையினர் மொழிப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுதல், அதன் அடிப்படையில் திட்டமிடல் என்னும் படிநிலைகளில் பிற மாநிலத்தவரையும் கைகோத்து அழைத்துச் செல்ல நல்லதொரு கல்வித் திட்டம் இவரால் இன்று முன்மொழியப்பட்டிருக்கிறது.
மொழி மனப்பாங்கு
மொழியுணர்வு என்பது தாய்மொழிப் பற்றோடும், பல நேரங்களில் தாய்மொழி வெறியோடும் மட்டுமே சேர்த்து எண்ணப்படுகிறது. இரண்டும் இருவேறு தளங்களில் இணையாகவே கருதப்பட்டாலும் இரண்டுக்கும் அப்பாற்பட்டு எந்த மொழி சார்ந்த உணர்வும் மொழியுணர்வே. இந்த உணர்வே, எல்லா மொழிகளும் ஒன்றே என்னும் மொழி மனப்பாங்கை வளர்க்கிறது. இந்தியா போன்ற பல மொழிகள் வழங்கும் பன்மொழிச் சமுதாயங்கள் நிறைந்த நாடுகளில் இந்த மொழி மனப்பாங்கு வளராவிட்டால், பிற மொழி வெறுப்பும் இன வெறுப்பும் மிகும். மேலும், இது போன்ற சிதைவுகள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசியம் ஆகியவற்றை அவ்வப்போது கேள்விக்குறியாக்கிவிடும். இவை இன்று அசாதாரண நிகழ்வுகளல்ல.
இந்தியாவின் மொழி அகதிகள்
இந்தியாவில் 1,652 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இன்று அழிந்துபோனாலும், எஞ்சிய மொழிகளின் எண்ணிக்கை மிகுதி. இதனால், உலகத்திலேயே முதன்மை மொழிக் காட்சிச்சாலையாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மொழிச் சூழலில், இங்கு வாழும் பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள், சமூகப் பொருளாதாரக் காரணங்களின் பொருட்டு மாநிலம் விட்டு மாநிலம் பெயர்வதோடு, அந்தந்த மாநிலங்களிலேயே நிலையாக வாழவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில், இவர்கள் அந்தந்த மாநிலங்களில் ‘மொழிச் சிறுபான்மையினர்’ என்னும் தளத்தில் மாநில அரசின் முழுக் கவனிப்பைப் பெறுகின்றனர். தாய்மொழிப் பாதுகாப்பு, மாநில மொழிக் கல்வித் திட்டத்தில் உரிய பங்கு என எல்லாச் சலுகைகளும் சட்டப்படி இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இம்மொழிச் சிறுபான்மையினரின் மொழிகளையும் பண்பாட்டு வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கே விரிந்த பொருளில் மொழியுணர்வாகும். தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ இந்தியோ மராத்தியோ குஜராத்தியோ பஞ்சாபியோ நமக்கு வேற்றுமொழிகள் அல்ல. இம்மொழிகளைப் பேசுவோரும் நமக்கு அயலவர் அல்ல.
தமிழகத்தின் இந்த மொழிச்சூழலில் புதியதொரு பரிமாணம் இன்று நம் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலிருந்து கூலித் தொழிலாளர்களாக தமிழகத்துக்கு வருவோர் எண்ணிக்கை பெருகிவருகிறது. குறிப்பாக, இவர்கள் உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, மணிப்புரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தனி நபராக மட்டுமன்றி, குடும்பத்தோடு புலம்பெயர்வோரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.
புலம்பெயர்வின் மொழி அவலம்
இந்த உள்நாட்டுப் புலம்பெயர்வு தமிழகத்தின் மொழிச்சூழலில் மற்றொரு புதிய மொழிச் சிறுபான்மையினரை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மொழிச் சிறுபான்மையினரும் சமூக, பொருளாதார, அரசியல், சூழலில் காலப்போக்கில் பல சிக்கல்களுக்கு உள்ளாகப்போவது தவிர்க்க முடியாதது. தனி இனக் குழுவாக மாறிவரும் இவர்களது இன்றைய பிரச்சினை, தமிழர்களோடு எதிர்கொள்ளும் கருத்துப் பரிமாற்ற அழுத்தமாகும். தமிழகத்துக்கு வரும் கூலித் தொழிலாளர்கள் இந்தி, மராத்தி, ஒரியா, வங்காளி, மணிப்புரி முதலிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். கருத்துப் பரிமாற்றத்துக்காகப் பெரிதும் இந்தி மொழியையே பயன்படுத்தும் இவர்கள், இந்தி தெரியாத சக தமிழ்க் கூலித் தொழிலாளர்களிடம் எப்படியோ இந்தி மொழி பேசும் கட்டாயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இருவருக்கும் இடையேயான இந்தக் கருத்துப் பரிமாற்ற அழுத்தம் அந்தக் கால பட்லர் ஆங்கிலம்போல் தமிழும் இந்தியும் கலந்த ஒரு பிட்ஜின் மொழியை மெல்ல உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்துப் பரிமாற்ற அழுத்தத்துக்கு ஒவ்வொரு கூலித் தொழிலாளியின் குழந்தைகள் உட்படக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆளாவது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், தாய்மொழிக் கல்வியும், புலம்பெயர்ந்த மாநிலத்தின் மொழிக் கல்வியும் பெற வாய்ப்பின்றிக் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் பரிதவிப்பது ஒருவித இனக்கொடுமையே.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்நிலையைக் கண்ட மாவட்ட ஆட்சியர் நாகராஜன், இந்தக் குழந்தைகளுக்குக் குறுகிய காலக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில், தாய்மொழிக் கல்விக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளார். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து குடும்பத்தோடு குமரிக்கு வருவோர் எண்ணிக்கை பெருகிவருகிறது. இவர்களுடைய குழந்தைகள் கல்வி வாய்ப்பின்றி வீதிகளில் சுற்றித்திரிவதைக் கண்டே இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உருவாக்கியுள்ளார்.
முன்னோடியாக ஒரு கல்வித் திட்டம்
‘ஒரு மனிதனின் தாய்மொழி மட்டுமே அவனைப் பண்புள்ளவனாக்கும்’ என்னும் கருத்துடைய மாவட்ட ஆட்சியர் இந்தி, வங்காளி எனப் பிற மாநில மொழிப் பாடநூல்களை வாங்கி, மொழி மற்றும் வயது அடிப்படையில் குழந்தைகளைப் பிரித்து அவரவர் தாய் மொழிகளைக் கற்க ஏற்பாடு செய்துள்ளார். மொத்தம் 272 குழந்தைகள் இந்தக் கல்வித் திட்டத்தின்கீழ் தத்தம் தாய்மொழிகளைக் கற்றுவருகின்றனர். இவர்களுள் 218 பேர் வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வங்காள மொழியைக் கற்பிக்க அந்த மொழி சார்ந்த ஓர் இளைஞரே ஆசிரியராக அமர்த்தப்பட்டுள்ளார்.
மொழிக் கல்வித் திட்டமிடலுக்கான அடிப்படை ஆய்வும் அணுகுமுறையும் இந்தத் திட்டத்தில் பின்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. இது போன்ற மொழிக் கல்வி சார்ந்த முயற்சிகளுக்கு மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் உதவும். பாடத்திட்டம் வகுத்தல், பாடநூல்கள் உருவாக்குதல், மொழிப் பயிற்றுநர்க்கான பயிற்சி அளித்தல் போன்ற பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் அவரவர் தாய்மொழியோடு மாநில மொழியான தமிழிலும் அந்தக் குழந்தைகள் அடிப்படை மொழியறிவு பெறத் தக்க வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்பைக் கருத்திற்கொண்டு மாநில மொழியின் முக்கியத்துவமும் இந்தத் திட்டத்தில் பேணப்பட வேண்டும். மாநில மொழிக் கல்வி மூலம் மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் மைய நீரோட்டப் பகுதிக்கு இந்தக் குழந்தைகளைக் கொண்டுவர முடியும். தாய்மொழி – மாநில மொழி என்னும் இருமொழிக் கல்விமுறை பின்பற்றப்பட வேண்டும். மொழியுணர்வு, மொழிக் கல்வி என்பனவற்றின் சமூக நடைமுறைச் சாத்தியப்பாடு இதுதான்.
No comments:
Post a Comment