மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச்செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34- வது வருட பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை)நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, பட்டமளிப்பு நிகழ்வினை தொடங்கி
வைத்தார். இவ்விழாவில் பொறியியல் துறையில் 690 பேருக்கு முனைவர் பட்டமும், பி.இ., பி.டெக்., போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கிய 114 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் தலைமை விருந்தினராக
கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, பட்டமளிப்பு விழா பேருரை
நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் அறிவுசார் தலைநகராக தமிழகம் உருமாறி வருகிறது என்றும், இதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்ற அவர், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழகம், இந்தியாவில் அறிவாற்றல் துறையின் தலைநகராக உருமாறிவருகிறது என்ற அவர் மேலும் பேசியது: "2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்களிலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பெருமைமிகு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த தலைசிறந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் பட்டம் பெற்றிருப்பது மாபெரும் சாதனை ஆகும். 1794-ம் ஆண்டு மே மாதம், "சர்வே பள்ளி"யாக தொடங்கப்பட்ட இந்த பொறியியல் கல்லூரி, பிரிட்டிஷ் இந்திய கல்வி நிறுவனங்களில் மிகச்
சிறந்தவற்றில் ஒன்றாக இன்று திகழ்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க தொழில் பயிற்சி பள்ளிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை தலைமையகத்தில், வான ஆராய்ச்சியாளராகவும், புவியியல் மற்றும் கடல் சார்ந்த அளவராகவும் இருந்த மைக்கேல் டாப்பிங் என்பவர் இந்நிறுவனத்தை தொடங்கினார். 1858-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பெயர் "சிவில் பொறியியல் பள்ளி" என மாற்றப்பட்டது. நாட்டிலேயே இந்தக்
கல்லூரிதான் முதன்முறையாக இயந்திரவியல் பொறியியல் துறையில்
பட்டம் வழங்கியது. மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள
சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும்,
நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும்.
நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மாற்றத்தின் தூதர்களாக நீங்கள் மாறுவதை நான் கண்காணித்து வருவேன். தமிழ்நாடு, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஆகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு. தமிழ்நாடு புதுமையின் மையமாகவும், நாட்டின் அறிவுசார் தலைநகரமாகவும் உருமாறி வருகிறது. இதற்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அவற்றில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன். பல்கலைக்கழகம் - வர்த்தக ஒத்துழைப்பு மையத்தை அமைத்தது, தொழில் நுட்பங்களை கண்டறிந்து, அவற்றை பகிர்ந்து கொள்ளும் மையங்கள் ஏற்படுத்தியது, உயர்ரக சோதனைக் கூடங்களுடன் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு, உயர் கல்வி மையங்களை அமைத்தது, மாணவர்களுக்கு நிர்வாகத்திறனையும் வேலைவாய்ப்புக்கான தகுதிகளையும் அளிக்கும் வகையில் திறன் பயிற்சி மையங்களை அமைத்தது, செய்தி மற்றும் தொழில்நுட்ப தகவல் மையத்தை அமைத்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மையங்களை அமைத்தது, மகளிருக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி
மையங்களை தொடங்கியது, சுற்றுலா மற்றும் ஹோட்டல் நிர்வாக
மையத்தை ஏற்படுத்தியது,
தமிழ்வழியில் கணினி மையங்களை உருவாக்கியது உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய
பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தது, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம்
சமுதாய வளர்ச்சிக்கு வழிகண்டது என எனது அரசு உயர்கல்விக்கு மிகுந்த
முன்னுரிமை அளித்துள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து ஊக்குவிப்புகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்குவது, மடிக்கணினி உள்ளிட்ட கல்வி சார்ந்த சாதனங்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். 2013 ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தின் பிராந்திய மையங்கள் மற்றும்
உறுப்பு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அவை தற்போது செயல்படத்தொடங்கியுள்ளன.
சமூகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டுவர உயர்கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
தற்போதுள்ள சவால்களையும், எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்னைகளையும் சமாளிக்க, கல்வி அறிவுதான் நமக்கு உதவி செய்யும். இந்த சவால்கள் சுற்றுச் சூழலாக இருக்கலாம், சுகாதாரமாக இருக்கலாம் அல்லது உணவுப் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். உயர்கல்வி மேம்பாடு என்பது எனது அரசின் செயல் திட்டங்களில் முதலாவதாக உள்ளது. இதன்படி,
கல்வி பணியை விரிவாக்குவது, புதிதாக மாணவர்களை சேர்ப்பது, திறமையை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மனிதவளத்தை மேம்பாடு அடையச்செய்ய எனது அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இனிமேலும் தொடர்ந்து மேற்கொள்ளும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment