பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்டக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்துக்கு உள்பட்ட முன்னோடி பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு தலா ரூ. 42 ஆயிரம் மதிப்பில் கணினி மற்றும் வெப் கேமரா வழங்கப்படுகிறது.
முன்னோடி பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வெப் கேமரா மூலம் கணினியில் பதிவு செய்து, மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காணும் வகையில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது. வகுப்பறை இணைப்புத் திட்டத்துக்கு, மாவட்டத்தில் 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், வைகை அணை மற்றும் ராஜேந்திரா நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், அல்லிநகரம், கண்டமனூர், ரங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் முன்னோடி பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட முன்னோடி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றனர்.
No comments:
Post a Comment