Wednesday, January 29, 2014

குறையும் மாணவர் சேர்க்கை; அரசின் கொள்கை முடிவு காரணமா?

தமிழக அரசு பட்ஜெட்டில், எந்த துறைக்கும்
இல்லாத அளவிற்கு, அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, பள்ளி கல்வித்துறைக்குத் தான் ஒதுக்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய்,
நிதி ஒதுக்கப்பட்டது.
இவ்வளவு கோடிகளை கொட்டியும்,
அரசு பள்ளிகளின் வளர்ச்சி, கல்வி தரம்
உயர்ந்திருக்கிறதா?
இதுகுறித்து, மூத்த ஆசிரியர் சங்க நிர்வாகியான,
அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பின், தென்னிந்திய
செயலர், அண்ணாமலை அளித்த பேட்டி: இந்த
ஆட்சி, அரசு ஊழியர், ஆசிரியர்,
ஏற்கனவே பெற்று வந்த பண பயன்கள் எதிலும், 'கை'
வைக்கவில்லை. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில்,
'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்,
ஆசிரியர்களுக்கு பயனளிக்காத புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய
திட்டத்தை கொண்டு வருவேன்' என,
ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அதை,
இன்று வரை செயல்படுத்தவில்லை.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய
அரசு வழங்கும் சம்பளத்திற்கு, இணையான சம்பளம்,
தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இந்த
இரு பிரச்னைகளையும் தீர்க்க, முதல்வர்
நடவடிக்கை எடுக்காதது, ஆசிரியர்களிடம்,
அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
பள்ளி கல்வி துறையில், நிர்வாக செயல்பாட்டில்,
பெரிய அளவிற்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை,
அடிக்கடி மாற்றப்படுவதால், நிலையான கொள்கை,
செயல்பாடுகள் இல்லை. எந்த துறையிலும் இல்லாத
அளவுக்கு, பள்ளி கல்வித் துறைக்கு,
ஆறாவது அமைச்சராக, வீரமணி வந்திருக்கிறார்.
கடமைக்கு...:
நமக்கு, நான்கு மாதம், ஐந்து மாதம் தான் பதவி என்ற
மன நிலையில், 'சீட்'டில் உட்கார்ந்தால், அவரால்,
எப்படி துறை செயல்பாடுகளில் கவனம் செலுத்த
முடியும். கடமைக்கு, அமைச்சராக இருந்துவிட்டு,
சில ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று,
சென்று விடுகின்றனர். இதனால், நிர்வாகத்தில் பல
குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஓர் அமைச்சர்,
குறைந்தது மூன்று ஆண்டாவது,
நிலைத்து இருந்தால் தான், துறையில் உள்ள
பிரச்னைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்ய,
உரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த
முடியும்.
இந்த ஆட்சியில், அதற்கு வழியில்லை. ஆய்வுக்
கூட்டம் என்பது, ஆசிரியர்களுக்கும்,
அதிகாரிகளுக்கும், பெரும் தலைவலியாக
இருக்கிறது.
மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு கூட்டம் நடக்கலாம்.
ஆனால், எப்போது பார்த்தாலும் நடக்கிறது. இதற்காக,
ஆசிரியர்களும், அதிகாரிகளும் அலைய
வேண்டியுள்ளது.
ஆசிரியரால், பாடம் நடத்த முடியவில்லை. மக்கள்
தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள், மாவட்ட
அளவில் உள்ள அதிகாரிகள் கூட்டம் என,
இதிலேயே நாட்கள் ஓடிவிடுகிறது. பின்,
எப்படி, மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்?
மாநிலம் முழுவதும், இரு ஆசிரியர் பள்ளிகள், 17
ஆயிரம் உள்ளன. ஒரு பக்கம், மாணவர்
சேர்க்கை குறைகிறது; மறுபக்கம், புதிய
பள்ளிகளை துவக்குகின்றனர். இதனால் தான், இந்த
நிலை. 'ஒரு கிலோ மீட்டருக்குள், ஒரு நர்சரி,
ஆரம்ப பள்ளி ஏற்கனவே இருந்தால், அந்த
பகுதிக்குள்,
மற்றொரு பள்ளிக்கு அனுமதி தரக்கூடாது' என,
விதிமுறை கூறுகிறது; ஆனால்,
அனுமதி தருகின்றனர்.
பல தனியார் பள்ளிகளை, அரசியல்
கட்சி பிரமுகர்கள்,
நேரடியாகவோ அல்லது உறவினர்கள்
மூலமாகவோ அல்லது பினாமிகள்
மூலமாகவோ ஆரம்பிக்கின்றனர். இதனால்,
அதிகாரிகள், எந்த கேள்வியும் கேட்காமல்,
அனுமதி தந்து விடுகின்றனர். தனியார் பள்ளிகள்
வளர்ச்சியை, அரசே, மறைமுகமாக ஊக்குவிக்கிறது.
இப்படி செய்வதை எல்லாம், செய்து விட்டு,
அரசு பள்ளிகளில், மாணவர்
எண்ணிக்கை குறைந்துவிட்டது என,
கூப்பாடு போடுவதால் என்ன பயன்? பல
குடும்பங்களில், ஒரு குழந்தை என்ற
நிலை வந்துவிட்டது.
கவுரவம் கருதி...:
இதனால், தனியார் பள்ளிகளில் படித்தால் தான்
கவுரவம் எனவும், அங்குதான் தரமான
கல்வி அளிக்கப்படுகிறது என்றும் கருதி,
பெற்றோர், பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்
சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில், மாணவர்
சேர்க்கை குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
சேர்க்கையை அதிகரிக்க, ஆரம்ப பள்ளிகளில்,
ஆங்கில வழி வகுப்புகளை துவக்குகின்றனர்.
ஆரம்ப கல்வியை, தாய்மொழியில் படித்தால் தான்
சிறப்பாக இருக்கும். ஆங்கில
வழி வகுப்புகளை எடுப்பதற்கு என,
தனி ஆசிரியர் கிடையாது. ஒரே ஆசிரியர், தமிழ்
வழியிலும் பாடம் நடத்த வேண்டும்; ஆங்கில
வழியிலும் பாடம் நடத்த வேண்டும். இது,
நடைமுறை ரீதியாக பல பிரச்னைகள்
ஏற்படுகின்றன. இதையெல்லாம்,
அரசு கண்டுகொள்வதில்லை.

No comments:

Post a Comment