புதுவை அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 10–ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற
மாணவர்களுக்கான கையேடு வெளியீட்டு விழா, சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு அமைச்சர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார். முதல்–அமைச்சர் ரங்கசாமி விழாவில் கலந்து கொண்டு கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசை வழங்கியும், மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டும் பேசினார். அவர் பேசியதாவது:–
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத பயிற்சி அளித்ததன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டும் அதுபோன்ற நிகழ்ச்சியை பள்ளி கல்விதுறை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பலனை பொதுத்தேர்வு முடிவில் தெரியும்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தரமான கல்வியை தருகிறார்கள். இருப்பினும் தனியார் பள்ளிகளில்தான் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். அதற்கு அரசு பள்ளிகளில் கல்வி தரம் மேலும் உயர வேண்டும். அரசு பள்ளி மாணவர்களும் மாநில அளவில் முதலிடத்தை பெற வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதில் அடித்தளமாக அமையும்.
புதுவையில் உயர் கல்வியை பெற அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வகையான கல்வியையும் எளிதில் புதுவையில் பெற முடியும். மாணவர்கள் இடையில் நிற்பது புதுவையில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த பயிற்சி 8 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி 100 சதவீத தேர்ச்சியை தர வேண்டும். மாநில அளவில் முதலிடங்களை புதுவை மாணவர்கள் பெறுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வல்லவன் வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:–
புதுவையில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு இருந்தோம். அதற்கான அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. இதன் மூலம் புதுவை பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள்களை எப்படி திருத்துவது என்பதையும், மாணவர்களை தேர்வுக்கு எப்படி தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்வித்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா வாழ்த்தி பேசினார். முடிவில் பள்ளி சுகாதார துறை துணை இயக்குனர் மீனாட்சி நன்றி கூறினார்
No comments:
Post a Comment