அண்மையில் ப்ரதம் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தமிழக பள்ளிக் கல்வியின் நிலை அதிர்ச்சி அளிக்கும்படியாக இருந்தது.
கிராமங்களில் உள்ள 5-ம் வகுப்பு மாணவர்களில் 31.9 சதவீதம் பேர் மட்டுமே 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடைப் பகுதியை வாசிக்க முடிந்ததாகவும், 14 சதவீதம் பேர் மட்டும் 3 இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடிந்தது என்றும் அதில் தகவல் இடம்பெற்றிருந்தது. இந்த இரு கற்றல் விகிதங்களும் தேசிய அளவில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் 47 சதவீதமாக உள்ளன. (பார்க்க படம் 1, 2)
ப்ரதமின் இந்த ஆய்வறிக்கை ஒரு மாதிரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுபோன்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதில் தொடர்ந்து தமிழக கிராமப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறைவாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் தமிழக பள்ளிக் கல்வி பற்றி வேறு இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன. ஒன்று என்.சி.இ.ஆர்.டி. (National Council of Educational Research and Training) என்ற மத்திய அரசு நிறுவனத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதை ஆராயும் அறிக்கை. மற்றொன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவர அறிக்கை.
என்.சி.இ.ஆர்.டி. ஆராய்ச்சியின் படி, 2011-ல் 5-ம் வகுப்பில் ஒவ்வொரு வாரமும் எத்தனை வகுப்புகள் (Periods) எடுக்கப் பட்டன. அவற்றில் ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை வகுப்புகள் ஒதுக்கப்பட்டன என்பதை படம் 3-ல் காணலாம்.
இதில் எல்லா பாடங்களுக்கும் எல்லா மாநிலங்களும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிப்பது தெரிகிறது. ஒன்றில் தமிழகம் தனித்துவமாக உள்ளது. 5 பாடங்களைத் தவிர மற்ற பாடங்களான கலை, விளையாட்டு, கைவினை போன்றவற்றில் அதிக நேரம் செலவிடப்படுவதில்லை என்று தெரிகிறது. இதனால், மற்ற பாடங்களிலும் மாணவர்களின் செயல்திறன் குறையலாம்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனம் தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இந்த நிறுவனம் மாவட்டக் கல்வி தகவல் முறை திட்டம் என்ற ஒரு திட்டத்தை தயாரித்து அதன் மூலம் எல்லா மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளின் வசதிகள், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்பட பல புள்ளிவிவரங்களை சேகரித்து கல்வி மேம்பாட்டு குறியீடு ஒன்றை தயாரிக்கிறது.
இந்த குறியீட்டின்படி, ஆரம்பக் கல்வியில் இந்திய மாநிலங்களில் முதல்நிலையில் உள்ள தமிழகம், நடுநிலைக் கல்வியில் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து ஆராயப்பட வேண்டும். ஒன்று முதல் எட்டு வகுப்புக்கான மொத்த குறியீட்டின்படி தமிழகம், மாநிலங்கள் இடையே மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வரும்போது நம் பள்ளிக்கல்வித்திறன் பற்றிய சந்தேகங்கள் உறுதியாகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், பிளஸ்-2 தேர்வில் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொறியியல் முதல் ஆண்டு கணித பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்பதால் அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது என்று கூறியது.
இன்றும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் முதுகலை படிப்பு வரை மென்திறன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும், தமிழிலும் கடிதங்கள், விண்ணப்பங்கள், பயோ-டேட்டா எழுதுவதையும் அன்றாட அலுவலக சூழலில் பேசுவதையும் கற்றுக்கொடுக்கிறோம், இவை எல்லாம் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டியவை என்பதை நாம் உணர்வதே இல்லை. பல தனியார் நிறுவனங்கள் இவற்றை கற்பித்து ஏராளமாக சம்பாதிக்கின்றன.
ஆகமொத்தத்தில், தமிழகத்தில் பள்ளிகள் இருக்கின்றன. ஆசிரியர்கள் உள்ளனர். கற்றலும் கற்பித்தலும் நடக்கின்றன. ஆனால், கற்றலின் வெளிப்பாடு குறைவாக உள்ளது. இதுபற்றி நடுநிலையான ஆய்வு தேவை.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
நமது ஆரம்பக் கல்வி பாடத்திட்டம், குழந்தைகளின் வயது, அவர்களின் ஆர்வம், திறமை அனைத்துக்கும் அப்பாற்பட்டு அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எங்கும் இதுபோல சுமையான பாடத்திட்டம் இல்லை. மொழிதான் அனைத்துக்கும் அடிப்படை. மொழி அறிவு சரியில்லை என்றால் மற்ற அனைத்தும் மோசமாகும்.குழந்தைகளுக்கு ஜீரோவில் இருந்து 9 வரை சொல்லிக் கொடுக்க 30 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார் கள். ஆனால், நாம் ஒரே நாளில் அவற்றை சொல்லிக் கொடுக்கிறோம். உண்மையில் குழந்தைகள் எண்களை தெரிந்துகொள்கிறார்கள். புரிந்துகொள்வதில்லை. எண்கள் விஷயத்தில் மனக்கணக்கு முறை அடியோடு போய்விட்டது.
பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர்:
பொதுவாக அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ற கற்றல்திறனை பெற்றுள்ளனர். குழந்தைகளின் குடும்ப, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு கற்றல் குறைபாடு இருக்கலாம். இரண்டு மூன்று வகுப்புகளை சேர்த்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் குழந்தைகளின் குறைபாட்டை கவனிக்காமல் போயிருக்கலாம்.
’ஏசர்’ அறிக்கையில் கற்றல்திறன் தொடர்பான குறைபாடுகள் சொல்லப்பட்டுள்ளனவே ஒழிய அவற்றுக்கான காரணங்களோ, தீர்வுகளோ தெரிவிக்கப்படவில்லை. அரசுப் பள்ளிக ளில் ஆசிரியர் பற்றாக்குறையா? ஆசிரியர்கள் தகுதியில்லாமல் இருக் கிறார்களா? பாடம் நடத்த நேரம் போதவில்லையா? என எதுகுறித்தும் அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மொழி ஆசிரியர், கணிதம், அறிவியல் பாடங்களுக்கும் தனியாக ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அலுவலக பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்
No comments:
Post a Comment