தேர்வு முடிவு குறித்த முழு விவரங்களை அண்ணா நகரில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் மண்டல அதிகாரி சுதர்சன்ராவ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:–சென்னை மண்டலம், அந்தமான் மற்றும் நிக்கோபர், டாமன், கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களை உள்ளடக்கி உள்ளது.சென்னை மண்டலத்தில் 1806 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 460 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 279 மாணவ–மாணவிகள் 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.இதில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 99.7 சதவீதம் தேர்ச்சி ஆகும்.10–ம் வகுப்பு தேர்வை பொருத்தவரை கிரேடு முறை இருப்பதால் வெற்றி தோல்வி என்று கருத முடியாது. மேல் வகுப்புக்கு தகுதியானவர்கள் என்றுதான் கூறமுடியும். அந்த வகையில் 257 மாணவ–மாணவிகள் தகுதி பெறவில்லை. அவர்களுக்கு ஜூலை 16–ந் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் 28,589 மாணவ–மாணவிகள் 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 28,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.94 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 99.2 சதவீதமும், மாணவிகள் 99.98 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.புதுவை மாநிலத்தில் 964 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறை 10–ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் புதிய முறை பின்படுத்தப்பட்டது.மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது. இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.சி.பி.எஸ்.இ. பிளஸ்–2 தேர்வு முடிவு 28–ந் தேதிக்கு முன்னதாக வெளியாக வாய்ப்பு உள்ளது.தேர்வு முடிவு தாமதத்தால் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் மா வர்கள் விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டாம். தேர்வு முடிவு வந்த பின்னர் மதிப்பெண் பட்டியலை சமர்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய கல்வி வாரிய தலைவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment