Thursday, May 22, 2014

ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு

அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள்
தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும்
பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன்
பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை
குறைக்க கோரியும் தாக்கலான வழக்கை,
மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
திருச்சி வயலூர் வக்கீல் இளமுகில்
தாக்கல் செய்த பொது நல மனு:
அரசு ஊழியர்கள் சனி, ஞாயிறு 104
நாட்கள், தேசிய மற்றும் பிற
விடுமுறைகள் (மத்திய மற்றும் மாநில
அரசு) 18, தற்செயல் விடுப்பு 15, ஈட்டிய
விடுப்பு 15, மருத்துவ விடுப்பு 12, என
மொத்தம் 164 நாட்கள்
விடுமுறையை அனுபவிக்கின்றனர்.
அனைத்து அரசு அலுவலர்களும்
ஆண்டுக்கு 196 நாட்கள்தான்
பணிபுரிகின்றனர். பள்ளிகள் 220 முதல்
230 நாட்கள் செயல்படுகின்றன. லோக்சபா,
சட்டசபை, உள்ளாட்சித்
தேர்தல்களின்போது, மக்கள்
நலப்பணி நடப்பதில்லை. மேற்கத்திய
நாடுகளில் மக்கள் தொகை மற்றும்
பிரச்னைகள் மற்றும் அரசுத்துறைகள்
குறைவு என்பதால், சனி,
ஞாயிறுகளில்
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் லட்சக் கணக்கில்
பட்டா மாறுதல், ஓட்டுநர் உரிமம், கட்டட
உரிமம், மின் இணைப்பு, ஓய்வூதியம்,
இழப்பீடு, கருணைப் பணி நியமனம்
மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல்,
தேங்கியுள்ளன. மத்திய சம்பளக் கமிஷன்,
2008 மார்ச் 24 ல் சமர்ப்பித்த அறிக்கையில்,
'அரசு அலுவலகங்களில் அரசிதழில்
வெளியிடப்பட்டுள்ள
விடுமுறை நாட்களை குறைக்க
வேண்டும். விடுமுறையை 2 முதல் 8
நாட்களாக கட்டுப்படுத்த வேண்டும்.
தேசிய விடுமுறை (குடியரசு தினம்,
சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி)
நாட்களின் போது மட்டும்,
அரசு அலுவலகங்கள் மூடப்பட வேண்டும்,'
என பரிந்துரைத்தது. மத
விடுமுறை நாட்களில், சம்பந்தப்பட்ட
மதத்தினரைத் தவிர, பிற மதங்களைச்
சேர்ந்தவர்கள் பணிபுரியலாம். மத்திய
சம்பளக் கமிஷன்
பரிந்துரையை நிறைவேற்ற மற்றும்
ஞாயிறு மட்டுமே வாரவிடுமுறையாக
அறிவிக்கக்கோரியும் மத்திய
பணியாளர் நலன்,
பொது குறைதீர்ப்பு மற்றும்
ஓய்வூதியர் துறை செயலாளர், தமிழக
பணியாளர் நலன் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத்துறை செயலாளருக்கு மனு செய்தேன்.
ஞாயிறு மட்டுமே வாரவிடுமுறையாக
அறிவிக்க வேண்டும். அரசிதழில் உள்ள
விடுமுறை நாட்களை குறைக்க
வேண்டும்; விடுமுறையை 2 முதல் 8
நாட்களாக கட்டுப்படுத்த வேண்டும்.
தேசிய விடுமுறையான 3 நாட்களின்
போது மட்டும், அரசு அலுவலகங்கள் மூட
வேண்டும் என உத்தரவிட வேண்டும், என
குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன்,
எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன்,
விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர்
வக்கீல் கே.கே.ராமகிருஷ்ணன்
ஆஜரானார். இடைக்கால
உத்தரவு பிறப்பிப்பதாக கூறி,
நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment