Thursday, May 08, 2014

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ்,
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்
ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட
அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்:
கல்வி உரிமைச் சட்டத்தின்படி,
ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழங்க
வேண்டிய 25 சதவீத இடஒதுக்கீட்டை வரும்
கல்வியாண்டில்
வழங்கப்போவதில்லை என்று தனியார்
பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக இலவச
கல்வி வழங்கியதற்கான
கட்டணத்தை தமிழக அரசு வழங்காததால்
இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக
அந்த அமைப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2009-இல்
நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்
சட்டத்தின்கீழ் இதுவரை தனியார்
பள்ளிகளில் முறையான இட
ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இந்தச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு நிரப்பப்பட
வேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள்
அதாவது 40 சதவீதம்
மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில்
உள்ள 3,550 தனியார் பள்ளிகளில் 1,000
பள்ளிகளில் ஓரிடம் கூட
ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
2014-15-ஆம் ஆண்டில் 25 சதவீத இட
ஒதுக்கீடு வழங்குவதற்கான
நடவடிக்கைகளை தமிழக அரசோ,
தனியார்
பள்ளிகளோ இதுவரை தொடங்கவில்லை.
பெரும்பாலான பள்ளிகளில்
விண்ணப்பங்கள் வழங்கப்படவே இல்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு 25 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் என
தனியார் பள்ளிகள் சங்கம்
அறிவித்துள்ளது. இது மத்திய, மாநில
அரசுகளுக்கு விடப்பட்ட சவாலாகும்.
இதனை மத்திய, மாநில அரசுகள்
ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்
தனியார் பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலத்தைப்போல
ஒற்றைச் சாளர முறையில் 25 இட
ஒதுக்கீடு இடங்களுக்கான
மாணவர்களை அரசே தேர்வு செய்ய
வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்
செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த
பிரிவினருக்கு வழங்க வேண்டிய 25
சதவீத ஒதுக்கீட்டு இடங்களை இந்த
ஆண்டு வழங்கப்போவதில்லை என்று தனியார்
பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆரம்பம்
முதலே பல்வேறு காரணங்களைக்
கூறி இந்தச் சட்டத்தை தனியார் பள்ளிகள்
எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில்,
இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட
மாணவர்களுக்கான தொகையை கடந்த
இரண்டு ஆண்டுகளாக தமிழக
அரசு திருப்பி வழங்கவில்லை எனக்
கூறி இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
எனவே, இந்தப் பிரச்னையில் தமிழக
அரசு தலையிட்டு, தனியார்
பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய
தொகையினை முழுமையாக வழங்க
வேண்டும். இச்சட்டத்தின்கீழ் 25 சதவீத
இடங்கள் முழுமையாக
நிரப்பப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க
வேண்டும். சில பள்ளிகள் தாங்கள்
சேர்த்துள்ள மாணவர்களின்
ஒரு பகுதியினரை இந்தச் சட்டத்தின் கீழ்
சேர்த்ததாக ஆவணங்களை தயார்
செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரிகள் இதைக்
கண்டும் காணாமல் இருப்பதாகவும்
செய்திகள் வருகின்றன.
இதனைக் கவனத்தில் கொண்டு,
இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன்
கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment