Sunday, May 04, 2014

பி.இ., விண்ணப்ப விற்பனையில் தொய்வு: முதல் நாளில் 68 ஆயிரம் பேர் தான் வாங்கினர்

பி.இ., சேர்க்கைக்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும், 60 மையங்களில்
வழங்கியபோதும், அவற்றை வாங்க, மாணவர்கள் அதிகளவில் ஆர்வம்
காட்டவில்லை.
கடந்த ஆண்டு, முதல்
நாளில், 88 ஆயிரம் விண்ணப்பங்கள்
விற்பனை ஆன நிலையில், நேற்று, 68
ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே,
விற்பனை ஆயின.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்,
அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக்.,
இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு,
ஜூன், மூன்றாவது வாரம்,
அண்ணா பல்கலையில் துவங்க உள்ளது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும், 60
மையங்களில், விண்ணப்ப வினியோகம்,
நேற்று துவங்கியது. சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் இருந்து,
ஏராளமான மாணவ, மாணவியர், நேற்று,
அதிகாலையிலேயே, சென்னை,
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில்
குவிந்தனர். மாணவர், அதிகளவில்
திரண்டு வந்ததால், விண்ணப்ப விற்பனை,
உடனடியாக துவங்கியது. காலை, 7:00
மணியில் இருந்தே, பல்கலையில்
அமைக்கப்பட்ட, 20, 'கவுன்டர்'களிலும்,
விண்ணப்ப விற்பனை, அமோகமாக
நடந்தது. மாணவ, மாணவியர்,
பெற்றோருடன், விண்ணப்பம் வாங்க,
ஆர்வமுடன் வந்தனர். சென்னை,
அண்ணா பல்கலைக்கு, மாணவர் அதிகம்
வந்தபோதும், இதர வினியோக
மையங்களில், மாணவர்கள் அதிகளவில்
ஆர்வம் காட்டவில்லை.
மாவட்டத்திற்கு தகுந்தார்போல்,
ஒன்று முதல், மூன்று வினியோக
மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சேலம்
மாவட்டத்தில், கருப்பூர்
அரசு பொறியியல் கல்லூரி,
கோரிமேடு மகளிர் கல்லூரி, ஆத்தூர்
கலை, அறிவியல் கல்லூரி ஆகிய
இடங்களில், விண்ணப்பம் வழங்க,
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாணவ, மாணவியர், அதிகளவில் வருவர்
என, எதிர்பார்த்து, பல, 'கவுன்டர்'கள்,
மூங்கில் தடுப்பு, போலீசார்
பாதுகாப்பு என, பல
ஏற்பாடுகளை செய்தனர். ஆனால்,
விண்ணப்பம் வாங்க, மாணவர்கள்,
அதிகளவில் வரவில்லை. இதனால்,
வினியோக மையங்கள், வெறிச்சோடின.
ஐந்தாயிரம் விண்ணப்பங்கள்
விற்பனை ஆகும் என, எதிர்பார்த்த
இடத்தில் கூட, 2,400ஐ தாண்டவில்லை.
இதர வினியோக மையங்களிலும்,
இதே நிலை தான். இதனால்,
நேற்று மாலை இறுதிவரை, தமிழகம்
முழுவதும், 67 ஆயிரத்து 935
விண்ணப்பங்கள் தான், விற்பனை ஆயின.
கடந்த ஆண்டு, விண்ணப்ப
விற்பனை துவங்கிய முதல் நாளில், 88
ஆயிரம் விண்ணப்பங்கள், விற்றுத் தீர்ந்தன.
இந்த ஆண்டு, 20 ஆயிரம்
குறைந்துள்ளது. விண்ணப்பம்
விற்பனைக்கு, கடைசி நாளான, வரும்,
20ம் தேதி வரை, மந்த நிலை நீடித்தால்,
மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை, கடந்த
ஆண்டை விட அதிகரித்துவிடும்.
பல்கலை வட்டாரம் கூறுகையில்,
'சனிக்கிழமை என்பதால், விண்ணப்பம்
குறைவாக விற்பனை ஆகி உள்ளது.
திங்கள் கிழமை,
விற்பனை அதிகரிக்கும்' என,
தெரிவித்தது.
பொறியியல் கல்லூரி பேராசிரியர்
ஒருவர் கூறியதாவது: பி.இ.,
படிப்பு மீதான மோகம், வெகுவாக
குறைந்து வருகிறது. ஆண்டுக்கு, 2.5
லட்சம் மாணவர்கள் படிப்பை முடித்து,
வெளியே வருகின்றனர். இவர்களுக்கான
வேலைவாய்ப்பு, மிக அரிதாக உள்ளது.
முன்னணி கல்லூரிகளில் கூட, 100
சதவீதம், வளாக
வேலைவாய்ப்பு தேர்வு நடப்பதில்லை.
ஏராளமான மாணவர்கள்,
படிப்பை முடித்து விட்டு,
ஓராண்டுக்கும் மேலாக,
வேலை தேடி வருகின்றனர். உள்
கட்டமைப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு,
தகுதி வாய்ந்த ஆசிரியர் என, எதுவும்
இல்லாமலேயே, பல பொறியியல்
கல்லூரிகள் செயல்படுகின்றன.
படிப்பை முடிக்கும் மாணவர்களில், 80
சதவீத பேரிடம், நிறுவனங்கள்
எதிர்பார்க்கும் திறன் இருப்பதில்லை.
இதுகுறித்த விழிப்புணர்வும்
பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
இதனால், பொறியியல் மீதான ஆர்வம்
குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்
கூறினார்.
கடந்த ஆண்டு நிலவரம்
மொத்த விண்ணப்பம் விற்பனை: 2.34 லட்சம்
கலந்தாய்வுக்கு வந்த மொத்த இடங்கள்:
2,05,463
நிரம்பிய இடங்கள்: 1,26,455
காலி இடங்கள்: 79,008
இந்த ஆண்டு...
தற்போதைய மொத்த இடங்கள்: 1.75 லட்சம்.
தனியார் கல்லூரிகள், நிர்வாக
இடங்களை, கலந்தாய்வு முறைக்கு,
'சரண்டர்' செய்தால், 2 லட்சத்தை தாண்டும்.
ஜூன், மூன்றாவது வாரம் துவங்கி,
ஜூலை இறுதி வரை,
அண்ணா பல்கலையில்,
கலந்தாய்வு நடக்கும்.
அரசு, அரசு நிதியுதவி மற்றும்
தனியார் சுயநிதி பொறியியல்
கல்லூரிகள் என, மொத்தம், 570
கல்லூரிகள் உள்ளன.

No comments:

Post a Comment