Tuesday, June 03, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் ஓரிரு நாளில் பதிவேற்றம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் ஓரிரு நாளில் பதிவேற்றம் செய்யப்படும் என அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பிளஸ் 2 விடைத்தாள் நகல்களைக் கோரி 79,952 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.
 இவர்களுடைய விடைத்தாள்களை ஸ்கேன் எடுக்கும் பணி சென்னையில் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விடைத்தாள் நகல்கள் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்படவில்லை.
 இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியது:
 பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் எடுக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டாலும், மாணவர்களுக்குரிய விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதில் சில குறைபாடுகள் உள்ளன. குறைபாடுகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள் நகல்கள் ஓரிரு நாளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இந்த ஆண்டு 5 நாள்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
  பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பு கலந்தாய்வுகளுக்காக ஜூன் 15-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஆகிய குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தேதிக்குள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment