அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில் 115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்று, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இந்த துறைகள் தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் அறிவிப்பார்கள் என்றுஎதிர்பார்த்த நிலையில், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 3,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றி உயர்கல்வித்துறை அமைச்சரின் பதிலுரையில் எந்த அறிவிப்பும் இல்லை.
இதுபற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தனர்.
கல்வித்துறைக்கு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான் என்றாலும், அவை மரபுகள் காற்றில் பறக்க விடப்படுவது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.தமிழக அரசில் 54 துறைகள் உள்ளன. அவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும் போது, அத்துறைகள் சார்ந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளியிடுவது தான் மரபு ஆகும்.
ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பெயருக்கு சில அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுவதும், முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிடுவதும் எழுதப்படாத சட்டமாகி விட்டது.
தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும்.ஆனால், 2011 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா நேற்று முன்நாள் வரை மொத்தம் 115 முறை இந்த விதியை பயன்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் பல தருணங்களில் ஒரே நாளில் 5 முறை 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நடப்புக் கூட்டத்தொடரில் கூடகடந்த 10ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் கழித்து 15 ஆம் தேதி அத்துறை தொடர்பான 8 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் 10 ஆம் தேதி முடிந்த நிலையில், அத்துறை குறித்த இரு முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் கடந்த 14 ஆம் தேதி முதலமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில் வேட்டி கட்டி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக பேரவையில் கடந்த திங்கட்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு அன்றே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்திருக்க முடியும். ஆனால், அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்காமல், அந்த பிரச்சினை குறித்தும் நேற்று முன்நாள் முதலமைச்சரே 110 விதியின் கீழ் பதிலளித்துள்ளார். 110 விதியை பயன்படுத்துவது முதலமைச்சரின் உரிமை என்ற போதிலும், எப்போதாவது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய அந்த விதியை மூன்றாண்டுகளில் 115 முறை பயன்படுத்தியிருப்பதும், இது ஒரு சாதனை என்று சட்டப் பேரவைத் தலைவர் பாராட்டுவதும் அவை மரபுகள் மற்றும் விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.
தமிழக சட்டப்பேரவை வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்களை நடத்திய பெருமை கொண்டது. அதை துதி பாடும் மன்றமாக மாற்றி விடாமல், பெருமையையும், மதிப்பையும் பாதுகாக்கும் வகையிலும், அவையின் விதிகள் மற்றும் மரபுகளை மதித்தும் செயல்பட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment