தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மலைப்பகுதியான வால்பாறைக்கு இரண்டு ஆம்புலன்ஸ் வேன்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வேன் ஆகியவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அவர் பேசியது:
தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கல்வித் துறைக்கு அடுத்தபடியாக சுகாதாரத் துறைக்குத்தான் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
தேசிய அளவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 42 குழந்தைகள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்தில் 21 ஆக உள்ளது.
இதே போல தேசிய அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் லட்சத்தில் 150 ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 73 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கான 24 நேர தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மூளைச் சாவடைந்த 450 பேரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் மூலம் 2,800 பேர் பயனடைந்துள்ளனர் என்றார்
No comments:
Post a Comment