அரசு கல்லுாரிகளில், 2009ல், உதவி பேராசிரியர்களாகச் சேர்ந்தவர்கள், ஐந்தாண்டுகள் ஆகியும் பணி வரன்முறை செய்யப்படாததால், சலுகைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக
நியமிக்கப்படுவோர், பணியில் சேர்ந்து, முதலில்
தகுதி காண் பருவத்தை (புரொபஷனரி) கடக்க
வேண்டும்; அப்போது தான், பணி நிரந்தரமாகும்.
அதன்பின்னரே, அரசு ஊழியர்களுக்கான
அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தகுதி காண்
பருவம் ஓராண்டு கழிந்த பின், பணி நிரந்தரம்
செய்யப்படுவது பொதுவான நடைமுறை.
ஆனால், தமிழகத்தில், 2009ல்,
உதவி பேராசிரியர்களாக அரசு கல்லுாரிகளில்
பணியில் சேர்ந்த, 900க்கும் மேற்பட்டவர்கள்,
இதுவரை, பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
பணி நிரந்தரத்திற்கான, சான்றிதழ்கள்
உண்மை தன்மை பெறுதல், கோப்புகள் தயாரித்தல்
போன்ற நடைமுறைகள் முடியவே, ஐந்தாண்டுகள்
ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.இது
குறித்து, அரசு கல்லுாரி ஆசிரியர் கழக தலைவர்
தமிழ்மணி கூறியதாவது:
பணி நிரந்தரம் செய்வதற்கான கோப்புகள்,
கல்லுாரி கல்வி இயக்குனர்
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு,
அங்கு சரிபார்க்கப்பட்ட பின், உயர்கல்வித்
துறையில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும்.
அந்த அரசாணை, பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தத் துறை, நிதித்
துறைக்கு அனுப்பப்பட்டு பணி நிரந்தரம்
செய்யப்படும்.
கடந்த, 2007ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறித்த
கோப்புகள் அனுப்பப்பட்ட போது, அதில் பல
குறைகள் காணப்பட்டன. இதையடுத்து, குறைகள்
சரி செய்யப்பட்டு, மீண்டும் கோப்புகள்
தயாரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான
அரசாணை பிறப்பிக்க கால தாமதம் ஏற்பட்டது.
எனவே, 2009 நியமன ஆசிரியர்களுக்கான
கோப்புகளும், குறைகளை சரி செய்யக்
கூறி திருப்பி அனுப்பப்பட்டன.
அதை ஆய்வு செய்ததில், உதவி பேராசிரியர்களின்
பெயர், தலைப்பு எழுத்து (இனிஷியல்), பணியில்
சேர்ந்த தேதி உள்ளிட்டவற்றில் பிழைகள் இருந்தன.
இவை, சரி செய்யப்பட்டு தற்போது, உயர்கல்வித்
துறையில் கோப்புகள் உள்ளன.
விரைவில், பணி நிரந்தர
ஆணை பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது.
இது தவிர, 2011ல் பணியில் சேர்ந்த, 500க்கும்
மேற்பட்ட உதவி பேராசிரியர்களுக்கான
பணி நிரந்தரத்திற்கான ஆவணங்கள்
இதுவரை தயாரிக்கப்படவில்லை.இதனால்,
அவர்களுக்கான மருத்துவ விடுப்பு; கடன் பெறும்
வாய்ப்பு போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது.
பணியில் சேர்ந்து, தகுதி காண் பருவம் முடிந்ததும்,
நிரந்தரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment