பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து 500 பேர் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக, 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். 2014 நவம்பரில், இவர்களின் தொகுப்பூதியம், 7000 ரூபாயாக உயர்த்தியும், ஊதியம் வழங்குவதில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் படி, சக அரசு அலுவலர்கள் போன்று, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதியம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன் கிடைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காண்பித்து வருகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 900 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு, டிசம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்க, போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசாணையில் அறிவித்த படி ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியத்தில், பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழுபறிக்கு பின் மாத இறுதியில் வழங்குவதால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜா கூறுகையில், ''இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகின்றனர். காசோலை வழங்குவதால், ஊதியத்தை பெறுவதற்கு, 20ம் தேதிக்கு மேல் ஆகிவிடுகின்றது. அரசாணை பிறப்பித்ததும். உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கும் என, மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், சிரமம் தொடர்ந்து வருகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment