Saturday, March 07, 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள்
திருத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே,
இந்த ஆண்டும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள்
திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது.
இந்தத் தேர்வை 2,377 மையங்களில் தனித்தேர்வர்கள் 42
ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம் மாணவர்கள்
எழுதுகின்றனர்.
தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள்
வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த
இரண்டு தாள்களுக்குரிய விடைத்தாள்கள்
தேர்வு மையங்களிலிருந்து, அந்தந்த
கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள்
காப்பு மையங்களுக்கு பாதுகாப்புடன்
எடுத்துச்செல்லப்பட்டன.
அடுத்த வாரத்தில் விடைத்தாள்கள் இந்த
மையங்களிலிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கும்
உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட உள்ளன.
மொழிப்பாடங்கள் உள்பட அனைத்துப் பாடங்களுக்கான
விடைத்தாள்களும் வெவ்வேறு மாவட்டங்களுக்குக்
கொண்டுசெல்லப்பட்டு திருத்தப்பட உள்ளன.
விடைத்தாள் திருத்துவது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள்
மார்ச் 16-இல் தொடங்கப்பட உள்ளன.
ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் 66
மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மார்ச் 31-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணிகள்
தேர்வு முடிவதற்கு முன்னதாகவே தொடங்குவதால், ஏப்ரல்
30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் அனைத்தும்
திருத்தப்பட்டு, அந்த மையங்களிலிருந்து மதிப்பெண்கள்
இணையதளம் வாயிலாகப் பெறப்படும் என அவர்கள்
தெரிவித்தனர்.
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் மொழிப்பாடத்
தேர்வுகளை எழுதியிருப்பதால், அந்த விடைத்தாள்களைத்
திருத்துவதற்கு மட்டும் நீண்ட நாள்கள் ஆகும். பிற
பாடங்களுக்கான விடைத்தாள்கள் சில நாள்களில்
திருத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள்களின் முகப்புச் சீட்டில் மாணவர்களின்
பெயர், பதிவு எண், புகைப்படம், ரகசிய பார்கோடு எண்
ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. விடைத்தாள்
திருத்தப்படுவதற்கு முன்பாக, முகப்புச் சீட்டின் பிற
பகுதிகள் நீக்கப்பட்டு, ரகசிய பார்கோடு எண் உள்ள
பகுதி மட்டுமே விடைத்தாளுடன் வழங்கப்படும்.
இதன்மூலம், விடைத்தாளைத் திருத்தும்
ஆசிரியர்களுக்கே கூட சம்பந்தப்பட்ட விடைத்தாள் எந்த
மாணவருடையது என்பது தெரியாது.
விடைத்தாள் திருத்தப்பட்ட பிறகு, அந்த
பார்கோடு எண்ணின் மூலம் சம்பந்தப்பட்ட
மாணவர்களின் பதிவெண்ணை அறிந்து அவர்களுக்குரிய
மதிப்பெண் வழங்கப்படும்.

No comments:

Post a Comment