தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது. மாவட்ட அளவில்கூட அரசு பள்ளி களின் மாணவர்கள் ரேங்க் பெறவில்லை என்பது பெற்றோரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தை வழக்கம் போல் மாணவியரே பிடித்தனர். திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றனர். கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி 1,193 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலிடத்துக்கான மதிப்பெண் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பெற்று உள்ளனர். மூன்றாம் இடத்தை நாமக்கல் மாணவி பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டப் பள்ளிகள் அதிக அளவில் மாநில 'ரேங்க்' பிடித்து வருகின்றன. இந்த ஆண்டும் அதேநிலை தொடர்கிறது. இதேபோல் பாட வாரியான முதல் மூன்று இடங்களிலும் இந்த மாவட்டங்களின் ஆதிக்கம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 24; சேலம், 16; ஈரோடு 16; கோவையில் 15 பேர் என முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பிற மொழிப் பாடங்களில் சென்னை முன்னிலையில் இருந்தாலும் தமிழ் வழியில் குறிப்பிட்ட மாவட்டங்களின் பள்ளிகளே மீண்டும் மீண்டும் முதலிடங்களைப் பிடித்துள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, விருது நகர் போன்ற மாவட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு முன் வரை பொதுத் தேர்விலும் தேர்ச்சியிலும் முன்னிலை பெற்றன.
No comments:
Post a Comment