ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரையின்படி பள்ளிக்கல்வி இயக்குனர்ச.கண்ணப்பன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
2015-2016 கல்வியாண்டு தொடங்க உள்ள இந்நேரத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.வருகிற கல்வி ஆண்டின் தொடக்க நாளான ஜூன் 1-ந்தேதி முதலே பள்ளி வழக்கம் போல முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்றே அனைத்து விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்பட அனைத்து விலை இல்லா பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கவேண்டும். தங்கள் பாடத்தில் கடந்த மூன்றாண்டுகளாக 10 அல்லது பிளஸ்-2 தேர்வில் ஆசிரியர்கள் கொடுத்த தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களுடன் வைத்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்து உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் சார்பான கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும். ஒழுக்கம் உள்ள மாணவர்களை உருவாக்குவதுதான் ஒரு ஆசிரியரின் முழுமுதற்கடமை ஆகும்.6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.பள்ளியில் அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து, மதிப்பெண்கள் பெற வைப்பதோடு, அவர்களை சிறந்த ஒழுக்கமும் பண்பும் உள்ளவர்களாக உருவாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். வழிபாட்டுக் கூட்டம் மற்றும் பிற செயல்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடத்த வேண்டும்.
சத்துணவு தரமானதாகவும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உண்மையான கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவை கொடுப்பதுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை, மனிதநேயம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். வருகிற கல்வி ஆண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே நன்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment