Wednesday, May 13, 2015

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் பாடப்புத்தகம் மீண்டும் விற்பனை

பெற்றோர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பின், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கவுன்டர் மீண்டும் திறக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.


         தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டப்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்களும், தமிழக அரசால் வினியோகிக்கப்படுகின்றன.

உரிய விலைக்கு

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், இப்புத்தகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும்; மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிய விலைக்கும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்புக்கு மட்டும் தமிழ் கட்டாயமாகியுள்ளது. அதற்கான புத்தகங்களும் பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பள்ளி கள் திறக்கும் போதே, மாணவர்களிடம் புத்தகங்கள் இருக்கும் வகையில், பள்ளிகளுக்கு முன்கூட்டியே புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தக வினியோகமும் முடிந்து விட்டது. ஆனால், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், புத்தகங்களை பாடநூல் கழகத்தில் உரிய நேரத்தில் வாங்காமல், பெற்றோர்களை நேரடியாக புத்தகம் வாங்க அறிவுறுத்தினர். பெற்றோர்கள், சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள் இருக்கும் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள புத்தக விற்பனை மையத்துக்கு வந்தனர். ஆனால், அங்கு புத்தகம், 'ஸ்டாக்' இல்லாமல், விற்பனை மையமே மூடப்பட்டது. இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.


மீண்டும் திறப்பு:



இந்நிலையில், டி.பி.ஐ., வளாகத்தில் பாடப்புத்தக விற்பனை மையம் விரைவாக புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்கள், தனி நபர்களுக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெற்றோர் பலர், ஏற்கனவே தனியார் புத்தக மையங்களில் அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்கி விட்டதால், அரசு பாடப்புத்தக விற்பனை மையம் வெறிச்சோடி காணப்படுகிறது

No comments:

Post a Comment