Friday, June 19, 2015

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த அவகாசம் வேண்டும்; ஐகோர்ட்டில், தமிழக அரசு கோரிக்கை

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர ஒரு ஆண்டு காலஅவகாசம் வேண்டும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.


அங்கீகாரம் ரத்து

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973-ன் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்படவேண்டும். ஆனால், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இந்த சட்டத்தின்கீழ் செயல்படாமல், தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் விதிகளின்கீழ் செயல்படுகிறது. இந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த விதிகளின்கீழ் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட அங்கீகாரங்களை ரத்து செய்யவேண்டும். தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

புதிய சட்டம்

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைந்த புதிய சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்த சட்டவரைவுகளை தயாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து, இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர எவ்வளவு காலம் ஆகும்? என்று தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜியிடம், நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறினார்.

ஒரு ஆண்டு வேண்டும்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவர ஒரு ஆண்டு காலஅவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தார்.

மேலும், அட்வகேட் ஜெனரலுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா எழுதியுள்ள கடிதத்தையும் தாக்கல் செய்தார். அந்த கடிதத்தை நீதிபதிகள் படித்து பார்த்தார்கள்.

சட்ட ஒப்புதல்

அந்த கடிதத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க நிபுணர்கள் குழு அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட பின்னர், 6 மாதத்துக்குள் அந்த குழு தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்யும். அந்த பரிந்துரைகள் மீது பொதுமக்களின் கருத்துக்கேட்கப்படும். அவ்வாறு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் அந்த பரிந்துரைகளில் திருத்தம் செய்து, புதிய சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். அதைதொடர்ந்து, சட்டத்தின் இறுதி வடிவத்தை சட்டசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். சட்டசபை ஒப்புதலை பெற்ற பின்னர், அந்த சட்டம் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள அரசுக்கு ஒரு ஆண்டு காலஅவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒரு மாதத்துக்குள்...

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அரசு செயலாளரின் கடிதத்தில், தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவர ஒரு ஆண்டு காலஅவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வக்கீல் கே.பாலு, நிபுணர்கள் குழுவை அமைக்க காலநிர்ணயம் செய்யவேண்டும். இதன்மூலம் காலதாமதம் ஏற்படுவதை தடுக்கலாம் என்று வாதிட்டார். எனவே, இன்று முதல் ஒரு மாதக்காலத்துக்குள் நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். ஒரு ஆண்டு கால அவகாசத்துக்குள் சட்டத்தை அமலுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்

No comments:

Post a Comment