Friday, July 24, 2015

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


இந்த விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது:தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகின்றன. எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை. ஒரேயொரு அரசுப் பள்ளி கூட மூடப்படாத நிலையில், தேர்தலை மனதில் கொண்டே அடிப்படையில்லாத இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 139 நடுநிலைப் பள்ளிகள், 884 உயர்நிலைப் பள்ளிகள், 402 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,530 பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.எந்தவொரு நிதிநிலை அறிக்கையிலும் பாதுகாப்புத் துறைக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்குத்தான் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டம், லேப்-டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என்றார்.சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கலைராஜன், தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகவேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment