திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம்
வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி
திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக, ஒன்பது பள்ளிகளில்,
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
கம்ப்யூட்டர் இணைய தளம் மூலம், மாணவர்களுக்கு
கல்வி கற்பித்தல், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை தகவல் தொழில் நுட்பம்
மூலம் பிற பள்ளிகளும் பயனடைய செய்தல், வெளிநாட்டு பள்ளிகளில் உள்ள கல்வி
நடைமுறையை, கல்வி செயல்பாடுகளை கிராமப்புற பள்ளி மாணவர்கள் அறியும்
வாய்ப்பை ஏற்படுத்துதல், கல்வியாளர்கள் மற்றும் கல்வி வல்லுனர்களின்
கருத்துகளை, இணையதளத்தில் மாணவர்களுக்கு நேரடியாக "ஸ்கைப்' மூலம்
தெரிவித்தல், மாணவர்கள் குழு மூலம் கற்கும் வாய்ப்பை உருவாக்குதல் என்ற
அடிப்படையில், கம்ப்யூட்டர் இணைய தளத்தில் வகுப்பறைகளை இணைக்கும் "காணொலி'
படக்காட்சி திட்டம், திருப்பூரில் நடைமுறைக்கு வருகிறது.
இணைய தளம் வாயிலாக வகுப்புகளை இணைப்பதன் மூலம்,
ஒரு ஆசிரியர் மற்ற பள்ளி வகுப்பு குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கலாம்;
ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை தவிர்க்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில்
இடுவம்பாளையம் பள்ளி, கேத்தனூர் பள்ளி, பாண்டியன் நகர் பள்ளி, ஜெய்வாபாய்
பள்ளி, நொய்யல் வீதி உயர்நிலைப்பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டுப்பாட்டில்
உள்ள, அவிநாசி, அவிநாசிலிங்கம்பாளையம், ஊத்துக்குளி சுண்டக்காம்பாளையம்,
திருப்பூர் வடக்கு 15 வேலம்பாளையம், பல்லடம் (கிழக்கு) ஆகிய நான்கு
நடுநிலைப்பள்ளிகளிலும், காணொலி படக்காட்சி கல்வித்திட்டம்
அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக, கல்வி இயக்குனரகம் மூலம்
பள்ளிக்கு தலா 8,000 ரூபாய் நிதி ஒதுக்கி, டேட்டா கார்டு அல்லது நெட்
இணைப்பு, லேப்-டாப், எல்.சி.டி., புரொஜெக்டர் போன்ற வசதி ஏற்படுத்தப்படும்,
காணொலி படக்காட்சி மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்த பயிற்சி,
கோவையில் வரும் 30ல் நடக்கிறது.
No comments:
Post a Comment