இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும்,
குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக
இருக்கக்கூடிய பிரச்னைகளில்
முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல்.
இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல்
முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல்
ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடியவிழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பொதுப்பணத்தில் முறைகேடு செய்வது" ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில்
நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது. இந்தியா 94வது இடம்: "டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்" 2013ம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை" என்ற அடிப்படையில் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 177 நாடுகளில்
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5
இடங்களில் உள்ளன. இந்தியா, 94வது இடத்தில் உள்ளது. அப்படியெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது. எதிர்க்க வேண்டும்: அரசு நிறுவனங்களில் நியாயமாக சான்றிதழ் பெறுவதற்கு, லஞ்சம் என்பது, அவசியமான ஒரு "ஆவணம்" என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்ட விரோதமாகவும், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. லஞ்சம்வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதற்கு துணை போகின்றனர். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின்
எண்ணிக்கை குறைவே. "மக்கள் நமக்கு எதற்கு வம்பு" என்று எதிர்க்காமல்
இருப்பதே இதற்கு காரணம். அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால்
அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளில் உள்ளது.
அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஒழிக்க வேண்டியவர்களே ஊழல் செய்தால் எப்படி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.அரசு அலுவலங்களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங்களில், லஞ்சஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக்கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண்டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்.
ஊழல்வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையையும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடம் அந்த
எண்ணமே வராது.
No comments:
Post a Comment