Monday, December 02, 2013

மாற்றுத் திறனாளிகள் தினம்:தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

முதல்– அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
கூறி இருப்பதாவது:–
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவு கூர்ந்திடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்றிட வேண்டுமென்ற உயரிய நோக்கில், இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள்,
உதவித்தொகை வழங்குதல், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சையும், ஆலோசனைகளும் வழங்குதல் ஆகியவற்றுடன் கல்வியும் அளிக்கும் மாநில ஆதார வள மையம்,
மாற்றுத் திறனாளிகளுக்கான உயர்த்தப்பட்ட மாதாந்திர உணவு மானியம், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்
திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள், வெளியூர் பேருந்துகளில் 75 சதவீத
பேருந்துப் பயணச் சலுகை, குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் முதல்– அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம் 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது, பார்வையற்றோருக்குக்காக
வாசிப்பவர்களுக்கு இரு மடங்காகவும், தேர்வு எழுத உதவுபவர்களுக்கு 250
ரூபாயாகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலால் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையினை 400-லிருந்து 1000-ஆக உயர்த்தியது.

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு எளிதில்
பணி நியமனம் கிடைத்திட தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்துவது போன்ற எண்ணற்ற தனித்தன்மையான
திட்டங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி நான் உத்தரவிட்டுள்ளேன்
என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியமைக்காக
இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இந்த ஆண்டு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான தேசிய விருது வழங்கப்படுவதிலும்,
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட
ஒதுக்கீடு முழுமையான முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதிலும் பெருமிதம் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் அனைவரும்
எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எல்லா நலன்களையும்,
வளங்களையும் பெற்று சம உரிமையுடன் வாழ்ந்திட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்– அமைச்சர்
ஜெயலலிதா கூறி உள்ளார்.

No comments:

Post a Comment