Monday, December 02, 2013

சென்னை மாநகராட்சி: போலி சான்றிதழ்மூலம் ஆசிரியர் வேலையில் சேர்ந்தகணவன்– மனைவி ஜாமீன் கேட்டு மனு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பணியாற்றிய
விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் எழுதிய மொட்டை கடிதத்தை வைத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது ஏராளமான ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து இதுபற்றி அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் சியாமளா,
இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழு விசாரணை நடத்தினர்.

இதில் கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மாநகாட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வந்த குப்பன், ராஜா மற்றும் கே.கே.நகர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பள்ளியில் வேலை பார்த்த முருகன் ஆகியோர் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்ததை கண்டு பிடித்தனர்.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது கல்வியாளர்கள்,
பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி பள்ளிகளில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்கள்
குறித்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் கூறி இருந்தனர்.

அவர்களது பெயர் விபரங்களை போலீசார் ரகசியமாக வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த
எழில்மாறன், அவரது மனைவி சத்யவேணி, எம்.கே.பி. நகர் சத்தியவேலு,
சேத்துப்பட்டு தினகரன், புதுப்பேட்டை சுகுமாறன் ஆகியோர் போலி சான்றிதழ்
கொடுத்து மாநகராட்சி பள்ளியில் பணி செய்து வந்தது தெரிந்தது. போலீசார் நெருங்குவதை அறிந்ததும் கணவன்– மனைவி உள்பட 5 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு கடந்த
வெள்ளிக்கிழமை கோர்ட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது.

கமிஷனர் அலுவலகத்துக்கு வரும்போது போலி ஆசிரியர்கள் 5 பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி ஆசிரியர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது மாநகராட்சி பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment