Sunday, December 08, 2013

விடைத்தாள் கட்டுகளை எடுத்து செல்லும் "ஆர்டர்' தபால் துறைக்கு கிடைக்குமா? மாற்று திட்டம் குறித்து தேர்வு துறை தீவிர ஆலோசனை!

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும்
பணியை, தபால் துறைக்கு வழங்காமல், மாற்று வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தேர்வுத் துறை, தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும்
எழுதுகின்றனர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், 18 லட்சம் பேர் தேர்வை எழுதுவர். மாநிலம் முழுவதும், பிளஸ் 2 தேர்வுகள்,
2,000த்திற்கும் மேற்பட்ட மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வு, 3,000த்திற்கும்
மேற்பட்ட மையங்களிலும் நடக்கும். தேர்வு முடிந்ததும், விடைத்தாள்
கட்டுகள், தபால் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பல ஆண்டுகளாக, இந்த பணியை, தபால்
துறை செய்து வருகிறது. பார்சல்களோடு, பார்சலாக, விடைத்தாள்
கட்டுகளும், எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும், இந்தப் பணியில், தபால் துறை, போதிய கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக, கடந்த பொதுத்தேர்வில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு விடைத்தாள் கட்டுகள் மாயமாயின. போதை ஆசாமியிடம், விடைத்தாள் கட்டுகளை கொடுக்க, அவர், அதை, பஸ்சில் எடுத்துச் சென்றபோது, இரு கட்டுகள் காணாமல் போயின.கடைசி வரை, அந்த விடைத்தாள் கட்டுகள்
கிடைக்கவில்லை.

மேலும், கடலூர் மாவட்டம்,விருத்தாசலத்தில், ரயிலில் இருந்து,விடைத்தாள் கட்டு, கீழே விழுந்ததில்,விடைத்தாள்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. இந்த விவகாரத்தில்,ரயில்வே துறையும், தபால் துறையும்,மாறி மாறி, ஒருவருக்கு ஒருவர்,குற்றம் சாட்டின. இதுபோன்ற குளறுபடிகள், வரும் தேர்வில் வரக்கூடாது என்பதில், தேர்வுத் துறை கவனமாக உள்ளது. இதனால்,
தபால் துறையிடம் பணியை வழங்காமல், மாற்று வகையில்,
விடைத்தாள்களை கொண்டு செல்வது குறித்து, ஆலோசித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), போலீஸ் பாதுகாப்புடன், வாடகை வாகனம் மூலம், போட்டி தேர்வு விடைத்தாள்களை கொண்டு வருகிறது.
அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) தனியார் கூரியர்
நிறுவனம் மூலம், போலீஸ் பாதுகாப்புடன், சென்னைக்கு, விடைத்தாள்களை கொண்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களில், சொதப்பல் எதுவும் நடக்கவில்லை.

எனவே, இதே தி"ட்டத்தை, தேர்வுத்துறையிலும்
செயல்படுத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. இந்த
தகவலை அறிந்ததும், தபால் துறை அதிகாரி ஒருவர், நேற்று முன்தினம், தேர்வுத் துறை இயக்குனரை சந்தித்து, "இனிமேல், பிரச்னை எதுவும் வராமல்
பார்த்துக் கொள்கிறோம்; எங்களுக்கே, மீண்டும், "ஆர்டர்' கொடுங்கள்' என,
கேட்டுள்ளார். மேலும், பல்கலை விடைத்தாள்களை கொண்டு வருவது போல்,
தேர்வு மையங்களுக்கு, நேரடியாக சென்று, விடைத்தாள் கட்டுகளை பெற்று, தேர்வுத் துறை தெரிவிக்கும் விடைத்தாள் திருத்தும் மையங்களில்
ஒப்படைப்பதாகவும், அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, தேர்வுத் துறை வட்டாரம் கூறுகையில், "தற்போது வரை, எந்த முடிவும் எடுக்கவில்லை. நன்றாக ஆலோசித்து, ஜனவரி இறுதிக்குள்,
முடிவை எடுப்போம். மாணவர்களின் விடைத்தாள், எந்த சேதாரமும் இன்றி,
பாதுகாப்புடன், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்வதை,
வரும் தேர்வில், உறுதி செய்வோம்' என, தெரிவித்தது.

No comments:

Post a Comment