Friday, February 21, 2014

டி.இ.டி., தேர்வில் இதர மாற்றுத்திறனாளிகளை புறக்கணிப்பதா? : தமிழக அரசுக்கு கேள்வி

"சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில்
(டி.இ.டி.,), பார்வையற்றோர் மட்டும்,
அனுமதிக்கப்படுவர்' என்ற, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும்
தேர்வு எழுத, அனுமதிக்க வேண்டும்' என,
மாற்றுத்
திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.இ.டி., தேர்வில், மாற்றுத் திறனாளிகள்,
தேர்ச்சி பெறுவதில், பல சிரமங்கள் இருந்ததால்,
அம்முறையை
மாற்ற வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள்,
அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 1995ல்
இயற்றப்பட்ட, சமவாய்ப்பு சட்டத்தின் படி, மாற்றுத்
திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும் எனவும், பல போராட்டங்களை நடத்தினர்.
சிறப்பு டி.இ.டி., தேர்வு : இதையடுத்து, "மாற்றுத்
திறனாளிகளுக்கு என,
தனி சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்' என,
கடந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில், "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு,
பார்வையற்றோர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்'
என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு,
பார்வையற்றோர் அல்லாத இதர
குறைபாடுகளை உடைய, மாற்றுத் திறனாளிகள்
எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
"பி.எட்., படித்து, பணியில்லாமல் இருக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கு, எளிதில்
பணி கிடைப்பதற்கு, தனியாக டி.இ.டி., தேர்வு,
நடத்தப்படும். இதில் தகுதி பெறும், பி.எட்.,
பட்டதாரிகள், தற்போதுள்ள
பின்னடைவு (ஏற்கனவே நிரப்பப்படாமல் உள்ள
இடங்கள்) காலி பணியிடங்களிலும், இனிமேல்
ஏற்படக் கூடிய, காலிப் பணியிடங்களிலும்
பணியமர்த்தப்படுவர்' என, கடந்த ஆண்டு, முதல்வர்
அறிவித்தார்.
அரசாணை : இதுவே, பின், அரசாணையாக
வெளியிடப் பட்டது. இதன்படி, அரசாணை மற்றும்
முதல்வர் அறிவிப்பில், "மாற்றுத் திறனாளிகள்'
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்
திறனாளிகள் எனில், பார்வையற்றோர், உடல்
ஊனமுற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் என,
அனைவரும் அடங்குவர்.
ஆனால், "சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு,
பார்வையற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இதன்மூலம், முதல்வர் உத்தரவை, டி.ஆர்.பி.,
மீறி உள்ளது. சிறப்பு தகுதித் தேர்வுக்காக
காத்திருக்கும், பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கு,
டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு,
ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே,
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், தேர்வில்
கலந்து கொள்ளும் வகையில், உத்தரவை மாற்ற
வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தயாராக உள்ளோம் : டி.ஆர்.பி., வட்டாரம்
கூறுகையில், "அரசாணையில், பார்வையற்ற மாற்றுத்
திறனாளிகள் என்று தான்
குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி தான்,
அறிவிப்பை வெளியிட்டு உள்ளோம்.
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும்
உள்ளடக்கி, புதிய அரசாணை வெளியானால்,
அதன்படி நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்'
என, தெரிவித்தது.

No comments:

Post a Comment