Wednesday, May 14, 2014

பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கி,சட்டப்பேரவையில் சட்டம்
கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன்,
அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர்
இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"கர்நாடகத்தில் உள்ள தொடக்கப்
பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய
பயிற்று மொழியாக அறிவித்து,
அம்மாநில அரசு பிறப்பித்த
அரசாணை செல்லாது என்று கடந்த
வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாய்மொழி கல்வி ஆதரவான
எண்ணம் கொண்ட அனைவருக்கும்
இத்தீர்ப்பு பேரதிர்ச்சி அளித்தது.
எனினும், தாய்மொழி வழிக்
கல்வியை நடைமுறைப்படுத்துவதில்
உறுதியாக இருக்கும் கர்நாடக
அரசு அதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பை மறுஆய்வு செய்யக்
கோரி மனுத் தாக்கல்
செய்யவிருக்கும் கர்நாடக அரசு,
அதில்
நீதி கிடைக்கவில்லை என்றால்,
கன்னடத்தை கட்டாய
பயிற்று மொழியாக்க
சட்டப்பேரவையில் சட்டம்
கொண்டு வந்து நிறைவேற்ற
முடிவு செய்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, மற்ற மாநில
முதலமைச்சர்களுடன்
இது குறித்து விவாதிப்பதுடன்,
தேசிய
வளர்ச்சிக்குழு கூட்டத்திலும்
வலியுறுத்தப் போவதாக கர்நாடக
முதலமைச்சர்
சித்தராமய்யா கூறியுள்ளார்.
மேலும்,
தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயமாக்கி அரசியல்
சட்டத்தை திருத்தும்படி மத்திய
அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்
போவதாகவும் அவர்
அறிவித்துள்ளார். கர்நாடக அரசின்
இம்முடிவுக்கு அங்குள்ள
அனைத்துக் கட்சித் தலைவர்களும்
ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
தாய்மொழி வழிக் கல்விக்காக
கர்நாடக அரசு எடுத்துவரும்
நடவடிக்கைகள்
உண்மையாகவே பாராட்டத்தக்கவை.
அதேநேரத்தில் தமிழகத்தின்
நிலைமையோ தலைகீழாக
உள்ளது.
தமிழ்நாட்டை கடந்த 47 ஆண்டுகளாக
ஆட்சி செய்துவரும்
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்
தமிழ்வழிக்
கல்வியை திட்டமிட்டு அழித்து வருகின்றன.
1975 ஆம்
ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகம்
மற்றும்
மதுரை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட
சில பள்ளிகளில்
மட்டுமே நடைமுறையில் இருந்த
பதின்நிலை (மெட்ரிக்)
கல்வி முறையை தமிழகத்தின்
அனைத்து பகுதிகளுக்கும்
விரிவுபடுத்தி கல்வியை வணிக
மயமாக்கியதுடன், ஆங்கில வழிக்
கல்வி தான் சாலச் சிறந்தது என்ற
நச்சு எண்ணத்தை தமிழ்நாட்டு மக்கள்
மனதில் ஆழமாக விதைத்த பாவம்
இரு திராவிடக் கட்சிகளின்
அரசுகளைத் தான் சாரும்.
தமிழ் வழிக் கல்வியைக்
கட்டாயமாக்கக் கோரி கடந்த 30
ஆண்டுகளாக தமிழறிஞர்களும்,
தமிழ் உணர்வாளர்களும்
பல்வேறு போராட்டங்களை நடத்திய
போதிலும், தமிழால்
ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள்
அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.
மாறாக, ஆங்கிலப்
பள்ளிகளுக்கு போட்டியாக
அரசு பள்ளிகளிலும் ஆங்கில
வழி கல்வியை தொடங்குவதில்
தான் முந்தைய தி.மு.க. அரசும்,
இப்போதைய அ.தி.மு.க. அரசும்
போட்டி போடுகின்றன.
ஒரு காலில் கட்டி ஏற்பட்டால்
அதை அறுவை சிகிச்சை மூலம்
அகற்றுவதே சரியான தீர்வாக
இருக்கும். மாறாக, ஒரு காலில்
ஏற்பட்ட கட்டியைப் போலவே,
இன்னொரு காலிலும்
கட்டியை உருவாக்குவது எப்படிப்பட்டதாக
இருக்குமோ, அதேபோல் தான்
மெட்ரிக்
பள்ளிகளை ஒழிப்பதை விடுத்து,
அதற்கு போட்டியாக அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வழிக்
கல்வியைத் தொடங்குவதும்
அமையும் என்பதை தமிழக
ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள
வேண்டும்.
கர்நாடகம், கேரளம், மராட்டியம்
போன்ற மாநிலங்களில் மொழி,
கல்வி தொடர்பான விஷயங்களில்
அந்தந்த மாநிலங்களின்
எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள்,
கல்வியாளர்கள் ஆகியோரைக்
கொண்ட அமைப்புகள் தான்
அரசுக்கு வழி காட்டுகின்றன.
ஆனால், தமிழகத்தில் அத்தகைய
அமைப்புகள் இல்லாததும்,
இருக்கும் தமிழறிஞர்கள்
அரசியல்ரீதியாக
பிரிந்து கிடப்பதும் நல்வாய்ப்புக்
கேடானதாகும்.
ஆங்கில வழிக்
கல்வி கவர்ச்சிகரமானதாக
இருக்கலாம்; ஆனால், தமிழ் வழிக்
கல்வி தான் அறிவார்ந்ததாகவும்,
சிந்தனைத்
திறனை தூண்டுவதாகவும்
இருக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ் வழிக்
கல்வியை கட்டாயமாக்கி தமிழக
சட்டப்பேரவையில் சட்டம்
கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன்,
அதற்கு அரசியல் சட்ட
பாதுகாப்பையும் பெற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மொழி,
கல்வி பற்றிய விஷயங்களில்
அரசுக்கு ஆலோசனை வழங்க
தமிழறிஞர்கள், கல்வியாளர்களைக்
கொண்ட சுதந்திரமாக செயல்படும்
அமைப்பையும் தமிழக
அரசு உருவாக்கி ஊக்குவிக்க
வேண்டும்" என்று ராமதாஸ்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment