கல்லூரிகளில் சேருவதற்கான சான்றிதழ் பெறுவதற்கு நகர்ப்புறத்தில் தங்கியிருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களைத் தேடி மாணவர்கள் அலைந்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் வட்டத்துக்கு உள்பட்டு மொத்தம்
117 கிராம நிர்வாக அலுவலகப் பணியிடங்கள்
உள்ளது. அவற்றில் சுமார் 60 பணியிடங்கள்
காலியாக உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள் எந்த
கிராமத்தில் பணிபுரிகிறார்களே,
அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும்
என்று அரசு விதியும், நீதிமன்ற உத்தரவும்
உள்ளது.
பொதுவாக, கிராமங்களில் வருவாய் ஆவணங்களைப்
பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள்,
பிறப்பு, இறப்புப் பதிவு, ஜாதி, வருமானம் மற்றும்
இருப்பிட சான்றிதழ் விநியோகம், புயல், மழை,
வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள்
குறித்து மேல்
அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட
பொறுப்புமிக்க ஏராளமான பணிகளைச் செய்ய
வேண்டியவர்களாக கிராம நிர்வாக அலுவலர்கள்
உள்ளனர்.
இதையடுத்து தாங்கள் பணிபுரியும்
கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே,
இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்ய
முடியும். ஆனால், இப்பகுதியில் மிகப்
பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள்
நகர்ப்புறத்தில் வீடு மற்றும் விடுதிகளில்
வாடகை எடுத்து தங்கி வருகின்றனர்.
பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக
அலுவலர்கள் வராத நிலையில் எந்நேரமும்
அவர்களுக்கான அலுவலகம் மூடியே கிடக்கிறது.
இதனால் மக்களுக்கான பணிகள்
பெருமளவு பாதிக்கப்படுகின்றன. எப்போதும்
திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் அவ்வாறான
கட்டடங்கள் நாளுக்குநாள் பழுதடைந்து வீணாகியும்
வருகிறது.
நகர்ப்புறத்தில் தங்கியுள்ள கிராம நிர்வாக
அலுவலர்களைத் தேடிச் சென்று மக்கள் தங்கள்
தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள
வேண்டியதாகிறது. மற்றும் சமூக விரோத
செயல்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும்
காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள்
நகர்ப்புறத்தில் தங்கியிருப்பதால், கிராமத்தில்
ஏற்படக்கூடிய ஒருசில
உண்மை சம்பவங்களை சரியாக அறிந்துகொள்ள
முடியாதாகி விடுகிறது.
மேலும் பல்வேறு சான்றிதழ் உரிய காலத்தில்
கிடைக்காமல் போவதால் மக்கள் பெரிதும்
பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. கிராம
நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில்
24 மணி நேரமும் தங்கிப் பணியாற்றும் வகையில்
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று இப்பகுதி மக்கள்
தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,
இக்கோரிக்கை குறித்து இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லை.
அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் தற்போது 12-
ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிப்
பெற்று கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ,
மாணவிகள் ஜாதி, வருமானம், இருப்பிடம்
உள்ளிட்ட சான்றிதழ் வாங்குவதற்காக, நகர்ப்புறத்தில்
தங்கியிருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களைத்
தேடி அலைந்து,
திரிந்து வருவது கவலை அளிக்கிறது. உரிய
காலத்தில் சான்றிதழ் கிடைக்காமல்போனால்,
எங்கே கல்லூரிகளில் சேர்ந்து மேல் படிப்பை தொடர
முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்
மாணவர்கள் உள்ளனர்.
இந்நிலையைப் போக்கிட, பணிபுரியும்
கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலர்கள்
தங்கி பணியாற்ற தமிழக அரசும், மாவட்ட
நிர்வாகமும்
இணைந்து இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாக உள்ளது.
No comments:
Post a Comment