Monday, June 02, 2014

ஜூன் 18ம் தேதி கவுன்சிலிங்: மருத்துவ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள். ஜூன் 18ம் தேதி கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 14ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளில், மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன.
இதில், அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் (383 சீட்டுகள்) போக 85 சதவீத சீட்டுகள் அதாவது 2,172 இடங்கள் உள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள 12 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1,560 இடங்கள் உள்ளன. இதில், நிர்வாக ஒதுக்கீடாக 646 இடங்கள் போக, 993 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ள 85 சீட்டுகளும், 18 சுயநிதி பல் மருத்துவகல்லூரிகள் மூலம் 937 சீட்டுகளும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் 19 அரசு மருத்துவ கல்லூரிகளில் நடந்தது. கடந்த 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள், செயலாளர் தேர்வுக்குழு, கீழ்பாக்கம், சென்னை&10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவ இயக்குனரகம் அறிவித்திருந்தது.
இந்த ஆண்டு மொத்தம் 30 ஆயிரத்து 380 மருத்துவ விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 20 ஆயிரத்து 662 விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்துள்ளனர். விற்கப்பட்டதில் இன்னும் 9,718 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர். இன்று கடைசிநாள் என்பதால், மீதமுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைதொடர்ந்து ஜூன் 12ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூன் 18ம் தேதி முதல் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கும் என்று மருத்துவ இயக்குனரகம் அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment