மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது.
பாரதீய ஜனதா வாக்குறுதி
மத்திய பாரதீய ஜனதா தலைமையிலான அரசு அடுத்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள சில முக்கிய அறிவிப்புகள் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் பிரசாரத்தின் போதே பாரதீய ஜனதா தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இந்த கட்டுப்பாடுகள் தங்கத்தை கடத்துவதற்கு தான் வழிவகுத்துள்ளன என்றும் கூறப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடியும் தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களை கருதியே தங்கத்தின் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். இது பொருளாதார நிலைமைக்காகவோ, கொள்கைகளுக்காகவோ மட்டுமாக இருக்காது என்றார்.
இறக்குமதி குறைந்தது
எனவே மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த நிதிமந்திரி அருண் ஜெட்லி ஆர்வமாக இருக்கிறார். தற்போது இந்தியாவில் தங்கத்தின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகிவிட்டது.
2012-13-ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தங்கம் இறக்குமதியின் மீது கட்டுப்பாடுகள் விதித்ததால் 2013-14ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி ரூ.20 ஆயிரம் கோடி அளவாக குறைந்தது. அதே சமயம் தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து விட்டது.
கட்டுப்பாடுகள் தளர்கிறது
தங்கம் இறக்குமதி குறைந்துவரும் அதேவேளையில் தங்க நகைகள் ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தங்க நகைகளின் தேவை அதிகரித்துள்ளதால் மே மாதம் தங்க நகை ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி 11.41 சதவீதம் குறைந்துவிட்டது.
உலகிலேயே இந்தியா தான் தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளை ஏற்று மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது.
இந்த தகவல் தங்க நகை வியாபாரிகளுக்கும், இதன் காரணமாக தங்கத்தின் விலை இன்னும் சரியும் என்று எதிர்பார்ப்பதால் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருமான வரி விலக்கு
அதேபோல மாத சம்பளதாரர்களின் வருமான வரி விலக்கு சலுகைக்கான உச்சவரம்பு தற்போது ரூ.2 லட்சமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்த உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.
தற்போது உள்ள விலைவாசி மற்றும் பொருளாதார நிலைக்கு இந்த தொகை போதுமானதாக இல்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். சில கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
எனவே மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது
No comments:
Post a Comment