சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ), ’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–
முதல்– அமைச்சர் ஜெயலலிதா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க 1093 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டார். ஆனால் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணைகளை பெற்றதால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது.
வருகிற 20–ந்தேதி முதல் கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. அடுத்த 1 மாதத்திற்குள் ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்படும்.
மேலும் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:–
தமிழ்நாட்டில் மொத்தம் 501 பாலிடெக்னிக் கல்லூரகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவ–மாணவிகள்தான் சேர்ந்துள்ளனர். 1 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. என்றாலும் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் வேண்டுமென்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து முதல்– அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க 32 கோடி ரூபாயும், பொறியியல் கல்லூரி தொடங்க ரூ. 54 கோடியும், ஒரு கலை அறிவியல் கல்லூரி தொடங்க ரூ. 7¼ கோடியும் தேவை. இது தவிர தொடர் செலவினங்களுக்கும் நிதி தேவை. என்றாலும் தேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்–அமைச்சர் புதிய கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்ட ரூ. 1000 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஒதுக்கி தந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment