Saturday, July 11, 2015

'தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துங்கள்' ஆசிரியர்களிடம் இயக்குனர் உருக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், ஐந்தாம் இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டன. வட மாவட்ட அரசு பள்ளிகள், 24 சதவீதம், 31 சதவீதம் என்று மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்றன. இதன் காரணங்களை ஆராய, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, மண்டல வாரியாக தேர்ச்சி ஆய்வு மற்றும் வழிகாட்டுதல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, வட மாவட்டங்களுக்கு, வேலுாரில் ஆய்வு கூட்டம் நடந்தது. 500 தலைமை ஆசிரியர்கள், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், ஆய்வாளர் பங்கேற்றனர்.


பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கார்மேகம், பழனிச்சாமி, அறிவொளி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இயக்குனர் கண்ணப்பன் வழங்கிய அறிவுரை:

இதுவரை தேர்ச்சி இல்லை என்று வருந்த வேண்டாம். இந்த ஆண்டு முதல் அதிக தேர்ச்சி காட்டுவோம். ஒவ்வொரு பள்ளியும், தங்கள் பகுதி மக்கள், பள்ளிச்சூழல், மாணவர் தன்மைக்கு ஏற்ப, புதிய திட்டங்கள் வகுத்து, நல்ல கல்வியை கொடுத்து தேர்ச்சி பெற வைப்போம்.

உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும், உயர் அதிகாரிகளை நேரில் தொடர்பு கொள்ளுங்கள். தேவையான சிறப்பு பயிற்சி, புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் இடம் நிரப்புதல் போன்ற நடவடிக்கையை உடனே மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள் எனில், விரைப்பு காலருடன், 'எழுந்து நில்' என்ற அதிகாரத்துடன் இருப்பது வழக்கம். இந்த முறை, முற்றிலும் மாறுதலுடன், இயக்குனர் கண்ணப்பன் வழங்கிய அறிவுரை, ஆசிரியர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment