Friday, July 31, 2015

ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5,500 உயர்நிலைப்பள்ளிகள், 5,900 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது உண்டு. அதன்அடிப்படையில் கடந்த வருடம் வரை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று ஒருவருடம் பணியாற்றினால் போதும். அந்த ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. அந்த நிலை மாறி அதை 3 வருடம் என்று பள்ளிகல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றியது. ஏற்கனவே இருந்தபடி ஒரு வருடம் என்று மாற்றவேண்டும் என்று ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டம் சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் சேவை கழக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் இரா.பிச்சை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் சேவை கழக செயலாளர் எஸ்.கார்மேகம், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, உமா, கருப்பசாமி, லதா, நரேஷ், பொன்னையா, செல்வராஜ், நாகராஜ முருகன், பாஸ்கரசேதுபதி, அமிர்தவல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது.
கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்த முடிவுகள் வருமாறு:-
* தொடக்க கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஒருவருடம் பணியாற்றினால் போதுமானது. (3 வருடத்தில் இருந்து ஒரு வருடமாக குறைக்கப்பட்டுள்ளது)
* எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் மட்டும் மாணவ-மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றால் போதாது. 6-வது வகுப்பில் இருந்தே அவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபடவேண்டும்.
* 2015-2016-ம கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தை 100 சதவீதமாக எட்டுவதற்கு அனைத்துமாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு எடுத்தால் கண்டிப்பாக முடியும்.
* அனைத்து பள்ளிகளிலும் அரசின் 14 வகையான விலை இல்லா பொருட்களும் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கிடைக்கச்செய்தல்.
* ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
COURTESY : MAALAIMALAR

No comments:

Post a Comment