Monday, June 02, 2014

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை(ஜூன் 2) கடைசி நாளாகும்.
இதுவரை கலந்தாய்வுக்கு 19 ஆயிரத்து 600 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடத்தப்பட உள்ளது.
 செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் மே 30-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 20 ஆயிரத்து 550 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) டி.ஜே. ஹரிகிருஷ்ணன் கூறியது:
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு இம்முறை 20 ஆயிரத்து 550 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாகும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க திங்கள்கிழமை மாலை 5.45 மணியோடு கால அவகாசம் முடியவுள்ள நிலையில், இதுவரை 19 ஆயிரத்து 600 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
 எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முடிந்த பிறகே கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வு நடத்துவது வழக்கம். அதன்படி ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்

No comments:

Post a Comment