தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியைத் தடை செய்து, தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியைத் தடை செய்து, தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சி.மணி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் செ.முத்துச்சாமி சிறப்புரையாற்றினார்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தாய் மொழி வழிக் கல்விதான் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் சிந்தனைத் திறன் வலுப்பெறும். சுயநிதிப் பள்ளிகள் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியைத் தடை செய்து, தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஏபிஎல் அட்டை வழிக் கல்வி, பாடப்புத்தக வழிக் கல்வி என 2 முறைகளில் பாடம் நடத்தப்படுகிறது. சுயநிதிப் பள்ளிகளில் புத்தகக் கல்வி மட்டுமே உள்ளது. இதனால், இரட்டைச் சுமை உள்ள அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைய இதுவும் முக்கியக் காரணம் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் இரண்டிலும் ஒரே கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களின் சேர்க்கை, நீக்கல், பதிவு விவரங்களை வலைதளத்தில் பதியும் முறையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் இணையதள இணைப்பு வசதியுடன் கணினி வழங்க வேண்டும்.
அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்காவிட்டால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்துச் சங்கங்களையும் ஒருங்கிணைந்துப் போராட்டம் நடத்தப்படும். தேர்தல் பணிக்கு நியமனம் செய்யும் போது, ஆசிரியர்கள் வகிக்கும் பதவிக்கேற்றவாறு முறையாக தேர்தல் பணியை வழங்க வேண்டும். பள்ளி விடுமுறை நாள்களில் நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் தே.அலெக்சாண்டர், நாமக்கல் மாவட்டத் தலைவர் க.பழனியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment