முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வில், விண்ணப்பதாரர் ஒருவரை, சான்றிதழ் சரிபார்க்க அழைக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கசகரனூரைச் சேர்ந்த, தேன்மொழி என்பவர் தாக்கல் செய்த மனு: தாவரவியலில், முதுகலை பட்டம், பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்த ஜூலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. எனக்கு, 93 மதிப்பெண் கிடைத்தது. 'கீ" விடைத்தாளை பார்க்கும் போது, மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டது தெரிய வந்தது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவில், குறைந்தபட்சம், 94 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்தால், நான் தகுதி பெற்று விடுவேன். மூன்று கேள்விகளுக்கும் எனக்கு மதிப்பெண் கிடைத்தால், பணி நியமனம் கிடைத்து விடும். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, இம்மாதம், 15ம் தேதி, மனு அனுப்பினேன். எனவே, முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை காலியாக வைக்க, இடைக்கால உத்தரவிட வேண்டும். மூன்று மதிப்பெண் வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், பணி நியமனம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் தாட்சாயணி ரெட்டி, ஜி.அன்பரசு, அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு: ஒரு கேள்விக்கு, மனுதாரர் சரியான பதில் அளித்துள்ளார். அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்கினால், 94 பெற்று விடுவார். எனவே, இடைக்கால நடவடிக்கையாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மனுதாரரை அழைக்க வேண்டும்; ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment