மக்களின் வரலாற்றை சொல்லித் தராமல் வளர்த்தது நம்முடைய கல்வி முறையின் தவறு என்றார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கனவு மெய்ப்பட இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் "இந்தியா உள்ளும் புறமும்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
நம்மிடையே உள்ள சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் பலமும் பலவீனமும் ஆகும். சோதனைகளையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழும் அதேநேரத்தில் நமக்கு அருகிலேயே நடைபெறும் அக்கிரமங்களை கண்டும் காணாததும்போல இருந்து விடுகிறோம்.
படிக்க இந்தியா என்ற நாடு வேண்டும், ஆனால், அதனால் பெற்ற அறிவு வெளிநாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம். அத்துடன் கல்வி, வேலை அத்தனையையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்துவிட்டோம்.
உலகிலேயே அதிக மழைப்பொழிவு, அழகிய சிகரம் எல்லாமும் இந்தியாவில்தான் இருக்கின்றன. அதே இந்தியாவில்தான் அடுத்தவேளை குடிக்கத் தண்ணீர் இல்லாத பகுதியும் இருக்கிறது. இதுதான் இந்தியாவின் அகமும் புறமும். இங்கு 100 முகங்கள் இருக்கின்றன; 100 வாழ்க்கை முறைகள் இருக்கின்றன.
கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் மறக்கக் கூடாத இருவர் பெரியாரும், காமராஜரும். இவர்கள் இல்லாவிட்டால் இத்தனை மாணவிகள் கல்விக் கூடங்களில் இருக்க முடியாது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிராவ்பூலே தனது மனைவி சாவித்திரி பாய் பூலேவை படிக்க வைத்து, தன்னுடைய பள்ளிக்கூடத்தில் பெண் ஆசிரியராகப் பணியில் அமர்த்திக் கொண்டார்.
அவர்தான் நாட்டின் முதல் பெண் ஆசிரியர். பெண் குழந்தைகளுக்கும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கல்வி கற்றுத் தந்ததால் சாவித்திரிபாய் பூலே மீது சாணியைக் கரைத்து ஊற்றினார்கள்.
இவையெதுவும் பாடப்புத்தகத்தில் இல்லை. ஏனென்றால் வரலாறு நமக்கானதாக இல்லை. நம்முடைய பெருமைகளையும் விற்று காசாக்கிவிட்டோம். தாஜ்மஹாலையும் விடவும் தமிழ்நாட்டிலுள்ள ஓர் அதிசயம் "கங்கை கொண்ட சோழபுரம்'. நுட்பமான சிற்பங்கள் 150-க்கும் மேல் இங்கே இருக்கின்றன.
அறிவும் திறமையும் கொண்ட இந்தியாவில் 40 சதவிகிதம் பேர் எதையும் செய்யாமல் இருப்பதுடன், நல்ல செயல்களை சீர்கெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களின் வரலாற்றைச் சொல்லித் தராமல் வளர்த்தது நம்முடைய கல்வியின் தவறு என்றார் ராமகிருஷ்ணன்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைவர் ஏ. ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம். குமரவேல், இணைச் செயலர் ப. சத்தியமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் ஆகியோர் பேசினர்.
No comments:
Post a Comment