Wednesday, November 20, 2013

58 சதவீத மாணவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு:நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ.,க்களுக்கு ஆலோசனை

மதுரை: "பள்ளி மாணவர்களில், 58 சதவீதம் பேருக்கு, இரும்புச் சத்து குறைபாடு உள்ளது. இவற்றை தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த,
முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி உட்பட, 12 மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பள்ளி சுகாதாரத் திட்டம்) வடிவேலு தலைமையில் நடந்தது. இதில் மருத்துவ அதிகாரிகள் பேசியதாவது: தமிழகத்தில்,
ஐந்து முதல் பிளஸ் 2 வரை படிக்கும், பள்ளி மாணவர்களில், 58 சதவீதம் பேருக்கும், மாணவியரில், 40 சதவீதத்தினருக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, தற்போது மாணவர்களுக்கு சுகாதாரத்
துறை மூலம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனரா என்பது கண்காணிப்படுவதில்லை.
அதனால், இத்திட்டத்தில் முன்னேற்றம் இல்லை. தமிழகத்தில், வரும் டிசம்பர்
அல்லது ஜனவரி முதல், பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த
அரசு திட்டமிட்டுள்ளது. இதில், மாணவர்கள் விரும்பும் மணம் மற்றும் சுவையில் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு, "ஹெல்த்' அட்டை வழங்கவும், வாரம் ஒரு முறை ஆசிரியர் அல்லது தலைமையாசிரியர் முன், மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டதற்கான பதிவை அந்த அட்டையில் குறிக்கும் வகையிலும்,
திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மருத்துவ அதிகாரிகள் பேசினர்.

No comments:

Post a Comment