Sunday, November 17, 2013

கல்வி முறையில் மாற்றம் வேண்டும்!

ஒரு பக்கம் சமச்சீர் கல்விக்கும், மற்றொரு புறம் ஆங்கில வழி கல்விக்கும், அரசு முக்கியத்துவம் தந்தாலும், வசதியானவர்களுக்கு தனியார் பள்ளி, வசதியற்றவர்களுக்கு அரசு பள்ளி என, தமிழகத்தின் கல்வி நிலை, இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
தனியார் பள்ளியில் மட்டுமே, தரமான கல்வி தரப்படுகிறது என்ற தவறான எண்ணமே, பெற்றோரிடம் உள்ளது.அரசு பள்ளியின் இழிநிலையே, இதற்கு காரணம் என்பதால், அடிப்படை கட்டமைப்புகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இடஒதுக்கீடு உள்ள அரசுத் துறையில், வேலை இல்லை; ஆனால், வேலை அதிகம் உள்ள தனியார் துறைகளில், இடஒதுக்கீடே இல்லை. மேலும், பல தனியார் நிறுவனங்களில் தமிழை விட, ஆங்கில மொழி அறிவையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அரசு, வேலை வாய்ப்பை உருவாக்காமல், உலக மயமாக்கல் என, எல்லாவற்றையும் தனியாருக்கு திறந்து விட்டதே இதற்கு காரணம். சமர்ச்சீர் கல்வி, தமிழகத்தில் முறையாக கொண்டு வரவில்லை. மேலும், அதை மாற்றிக் கொள்ள, மெட்ரிக் பள்ளிகளுக்கு வாய்ப்பும் உள்ளது. சில தனியார் பள்ளிகள், பண வசூலுக்கு இடைஞ்சல் இல்லாத, சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறி வருகின்றனர்.தேர்வுகளும், வடிகட்டுதலும் இல்லாமல், கற்பவரும், கற்பிப்பவரும் கூட்டாக சேர்ந்து, இவ்வுலகை புரிந்து கொள்வது தான் கல்வி. எனவே, கேட்ட கேள்விக்கு மட்டுமே, பதில் சொல்லும் இயந்திரமாக, குழந்தைகளை மாற்ற நினைக்கும் இன்றைய கல்வி முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே ஒரு முறை, ஆசிரியர் அல்லது டாக்டர் பட்டம் பெற்று விட்டாலே, ஓய்வு பெறும் வரை, எதையும் படிக்க தேவையில்லை என்ற, இந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின், பெற்ற பட்டம் காலாவதியாகி, மீண்டும் தேர்வு எழுதி, தகுதியை உறுதிபடுத்த வேண்டும். அரசு பணத்தில் பட்டம் பெற்று, அமெரிக்காவில் செட்டில் ஆவதை தடுத்து, அரசு செலவழித்த பணத்தை, திரும்ப பெற வேண்டும்.

No comments:

Post a Comment