Thursday, November 21, 2013

சமூக மோதலை தூண்டிய ஆசிரியர்இடமாறுதல்:ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்உத்தரவு!

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக,  அரசுப்பள்ளி ஆசிரியரை இடமாறுதல் செய்தது, சமூக நலன் கருதி செய்யப்பட்டது.
எவ்வித காரணமும் இன்றி 6 மாதங்களாக பணி செய்யாமல் உள்ள அவர் மீது,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சங்கரன்கோவில் ஜெயசேகரன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் பெரியகோவிலான்குளம்
அரசு உயர்நிலை பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறேன். விருதுநகர் மாவட்டம் மங்கலம் அரசு மேல்நிலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பள்ளிக்
கல்வித்துறை இணை இயக்குனர் ஏப்.,22 ல் உத்தரவிட்டார். என்னை, நிர்வாகக்
காரணங்களுக்காக இடமாறுதல் செய்யவில்லை. தண்டிக்கும் நோக்கில்
இடமாறுதல் செய்துள்ளார். விளக்கம் அளிக்க, வாய்ப்பளிக்கவில்லை.
இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார் ஆஜரானார். திருநெல்வேலி முதன்மைக்கல்வி அலுவலர் பதில் மனு: மனுதாரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனுதாரருக்கும், அதே பள்ளியில் ஏற்கனவே தலைமை ஆசிரியராக
பணிபுரிந்த மாரியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இதனால், இரு சமூகத்தினரிடையே மோதலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக, போலீஸ் தரப்பில் தகவல் வந்தது. மாரியப்பன் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியருக்கு கட்டுப்படாமல் மனுதாரர் நடந்துகொண்டார். இதனால், இடமாறுதல் செய்யப்பட்டார். நீதிபதி: மனுதாரர், இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளிக்குச் செல்வில்லை. தனது கடமையை நிறைவேற்றவில்லை. புதிய இடத்திற்கு வேலைக்குச் செல்லாததற்கான, காரணத்தை தெரிவிக்கவில்லை. ஆனால், சம்பளம் பெறத் தயாராக உள்ளார். மனுதாரர் ஆசிரியர் என்பதால்,
மனசாட்சியுடன் நடந்துகொள்ளவேண்டும். சமூக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டதை, தண்டிக்கும் நோக்கில் செய்ததாக கூற முடியாது. எந்த ஒரு அரசு ஊழியரும், குறிப்பிட்ட இடத்திற்கு வேலைக்குச் செல்லமாட்டேன் என மறுக்க முடியாது. மனுதாரருக்கு, மாணவர்களைப் பற்றி கவலை இல்லை. எவ்வித காரணம், முன் அனுமதி இன்றி 6 மாதங்களாக பணி செய்யாமல் உள்ளார். அவர் மீது கல்வித்துறை அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment