Sunday, December 08, 2013

கனவு ஆசிரியர் - அமைச்சர்களின்ஆசிரியர்

அமைச்சராக, தேர்தலில் நின்று ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் ஸ்கூலுக்கு வந்து, டீச்சர் சொல்றதைக் கேட்டாலே போதும். நாங்க அப்படித்தான் அமைச்சரானோம்'' என்கிறார்கள் இந்த மாணவர்கள்.
திருப்பூர் மாவட்டம், வீராட்சிமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுட்டி அமைச்சர்களைப் பார்க்கலாம் வாருங்கள்.
பள்ளி மாணவர்களுக்கு கபடி, கிரிக்கெட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளின் அடிப்படைகளைச் சொல்லித் தருவதும், பிற பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு துணையாகச் செல்வதும் விளையாட்டுத் துறை அமைச்சரின் வேலை. ''இப்ப நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், எங்க ஸ்கூல் பையன்தான் ஜெயிச்சான். அப்போ, தலைமை ஆசிரியர் என்னையும் கூப்பிட்டுப் பாராட்டினார்'' என்று சொல்லும் விளையாட்டு அமைச்சர் சந்தோஷ்குமார் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, முதலமைச்சர் என்று ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் அமைச்சர்
பதவியைக் கொடுத்து, அவர்கள் செய்யவேண்டிய பணியை ஒதுக்கி இருக்கிறார், தலைமை ஆசிரியர் நடராஜ். ''நான் 28 வருடங்களாக ஆசிரியராக உள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன், இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வந்தேன். நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில்  மாணவர்
மன்றத் தலைவராக நான் இருந்தேன். இந்த மாணவர்கள் ஆரம்பத்தில் பேசுவதற்கே கூச்சப்பட்டார்கள். இவர்களின் கூச்சத்தைப் போக்கவே, இந்த மாணவர் மன்றத்தைத் தொடங்கினேன். இதில் அமைச்சர்கள், முதலமைச்சர் தேர்வு நடக்கும். மாணவர்களின் வருகைப் பதிவு, படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்களைத் தேர்வு செய்வதால், மாணவர்களிடையே நாமும் சரியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க
வேண்டும் என்ற எண்ணம் உருவானது'' என்கிறார். மாதந்தோறும் மாணவர் மன்றம் மூலம், அந்த மாதத்தில் வருகிற தலைவர்களின் பிறந்த நாள்
மற்றும் நினைவு நாள் தினங்களுக்கு அவர்களைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்கிறார். ''இதனால் கூச்சம் நீங்கி, 'மேடையில் எங்களாலும்  தைரியமாகப் பேச முடியும்’ என்ற நம்பிக்கை வந்துள்ளது. பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெறுகிறோம்'' என்கிறார்கள் மாணவர்கள். படைப்பாற்றல் மற்றும் கல்வியில் மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக இந்தப் பள்ளி தேர்வாகி இருக்கிறது. கடந்த 22 வருடங்களாக ஆண்டு விழாவே கொண்டாடப்படாத
இந்தப் பள்ளியில், இரண்டு வருடங்களாக ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திவருகிறார் நடராஜ்.

''இந்த வருடம் இந்தப் பள்ளியில்தான் மாவட்ட செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதற்காக நிறையப் பேர் என்னைப் பாராட்டினாங்க.
இதற்கு நான் மட்டும் காரணம் கிடையாது; மற்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் பங்களிப்பும்தான் காரணம். நம் கடமையைக்
கடனே என்று செய்யாமல், எப்படிச் செய்தால் இதில் மற்றவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களையும் முழுமையாக ஈடுபடுத்தலாம் என
யோசித்துச் செய்தாலே போதும். அதைத்தான் நான் செய்கிறேன்'' என்று அடக்கத்துடன் புன்னகைக்கிறார் நடராஜ்.

No comments:

Post a Comment