Tuesday, February 11, 2014

10ம் வகுப்பு புத்தகம் அச்சடிப்பதில் குழப்பம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்
தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிகிறது.
அதேபோல கீழ் வகுப்புகளுக்கும்
ஆண்டுத் தேர்வுகள் நடக்க
இருக்கின்றன.இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும்
தனியார் பள்ளிகளில் 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்புக்கு செல்லும்
மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் 9ம்
வகுப்புக்கான பாடங்களை மேலோட்டமாக
நடத்தி விட்டு, வருடத்தின் பாதியில் இருந்து 10ம்
பொதுத் தேர்வுக்கு அவர்களை தயார்படுத்தும்
பணியில் இறங்குகின்றன. அதனால் 9ம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 10ம்
வகுப்புக்கான பாடங்களை நடத்தத்
தொடங்கிவிடுகின்றனர். இதனால் 9ம்
வகுப்புக்கு வரும்போதே 10ம்
வகுப்பு பாடப்புத்தகங்களையும் வாங்கிக்
கொண்டு வர வேண்டும்
என்று வலியுறுத்துகின்றனர்.அரசுப்
பள்ளிகளிலும் இதே நிலைதான். மே மாத
விடுமுறையிலோ அல்லது பள்ளிகள்
திறக்கும்போதோ புத்தகங்களை வாங்கச் சென்றால்
கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் புத்தக
பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
அதை கணக்கிட்டு சில பெற்றோர்,
இப்போதே புத்தகங்களை வாங்கி இருப்பில்
வைத்துக் கொள்ள திட்டமிடுகின்றனர். அதனால்
சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ
வளாகத்துக்கு இப்போதே பெற்றோர் படை எடுக்கத்
தொடங்கிவிட்டனர்.
பத்தாம் வகுப்புக்கான புத்தகம் அச்சிடுவதில்
தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
ஏற்கெனவே அரசு அறிவித்தபடி அடுத்த
ஆண்டு 10ம் வகுப்புக்கு முப்பருவ
முறை வருகிறதா, இல்லையா என்ற குழப்பம்
நீடிக்கிறது. அரசு தரப்பில் இருந்து இன்னும்
தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவு ஏதும்
வராத நிலையில் அச்சிடும்
பணியை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், 10ம்
வகுப்புக்கு முப்பருவ முறை கொண்டு வரப்பட்டால்
புத்தகத்தை பிரித்து அச்சிட வேண்டும்.
இல்லை என்றால் ஒரே புத்தகமாக அச்சிட வேண்டிய
நிலை ஏற்படும்.இது தவிர, பத்தாம் வகுப்புக்கான
தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக
அரசு அறிவித்தால்,
புத்தகத்தை எப்படி அச்சிடுவது என்ற குழப்பமும்
நீடிக்கிறது.இதற்கிடையே, 10ம் வகுப்பு புத்தகம்
தயாரிக்கும் பாட நூல் குழுவினர்
ஒரே புத்தகமாகவும், முப்பருவ முறைக்கு ஏற்ப
இரு பிரிவுகளாக பிரித்தும் புத்தக
மாதிரிகளை தயாரித்துள்ளனர். இவற்றில்
எதை அச்சிட வேண்டும் என்று
அரசு அனுமதி வழங்கினால் தான்,
தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிடும்
பணியை தொடங்கும் என்று தெரிகிறது.
ஆனால், அடுத்த ஆண்டு 10ம் வகுப்புக்கு செல்லும்
மாணவர்களுக்கு இப்போதே பாடங்களை நடத்த
வேண்டும் என்பதால்
ஒரே புத்தகமாகவே அச்சிட்டு கொடுத்தால் நல்லது.
முப்பருவ முறை அல்லது தேர்வு ரத்து என
எதை அரசு அறிவித்தாலும்,
ஒரே புத்தகத்தை வைத்து சமாளித்துக் கொள்வோம்
என்று பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால்
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில்
இப்போதைக்கு புத்தகம் ஸ்டாக் இல்லை. அதனால்
பெற்றோர் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment