Monday, February 17, 2014

தேவை, கல்வி முறையில் ஒரு மாற்றம்! துக்ளக் கட்டுரை

நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் குழந்தைகள் என்பது, உலகெங்கும் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயம்.
அவர்களின் தரம் மற்றும் வளர்ச்சிதான்
ஒரு நாட்டின் எதிர்கால வளத்தை நிர்ணயம்
செய்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்
கொள்கிறோம்.
இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் 122
கோடி. அதில், சரி பாதி 50 சதவிகிதம் 25
வயதிற்கு கீழ் உள்ள இளைஞர் மற்றும் சிறுவர்கள்.
மீதி 50-ல் 65 சதவிகிதம் 35
வயதிற்கு உட்பட்டவர்கள்.
கோடிக்கணக்கான சிறுவர்களை உள்ளடக்கிய நம்
நாட்டில், இவர்களது தரமான
வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களை நாம்
உருவாக்கி வளர்த்துள்ளோமா?
66 ஆண்டுகளுக்கு முன் நம்மிடம் பிரிட்டிஷ்
அரசாங்கம் விட்டுச் சென்ற கல்வி முறையை நாம்
எப்படி பயன்படுத்திக் கொண்டோம் என்பதையும்,
அது இன்றைய நிலையில்
எப்படி இருக்கிறது என்பதையும் ஆராய்ந்தால், நாம்
சரியான நடவடிக்கைகளைக் கையாண்டு,
நமது வருங்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில்
சிறுவர்களுக்கான
கல்வியை உருவாக்கவில்லை என்பது புரியும்.
பிரிட்டிஷ் அரசின் இந்தியாவிற்கான கல்வித்
திட்டத்தால் உருவான படித்தவர்கள் மற்றும்
பட்டதாரிகள், அரசாங்க வேலைகளில்
கிளார்க்குகளாக, பள்ளி ஆசிரியர்களாக,
போலீஸ்காரர்களாக வேலை செய்யும் தகுதியைப்
பெற்றார்கள்.
அன்றையப் பாடத்திட்டத்தின் நோக்கமும்
அதுவாகவே இருந்தது. ஆங்கிலத்தைப்
புரிந்து கொள்வது, எழுதுவது ஆகிய
இரண்டும்தான் முக்கியமான அம்சங்கள்.
பாடங்களை மனப்பாடம் செய்து, பரீட்சையில்
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை எழுதி,
பாஸ் செய்வது ஒன்றே போதும் என்ற
நிலை அன்று இருந்தது. அது இன்று வரை,
அதாவது சுதந்திரம் அடைந்து 66 வருடங்களாகத்
தொடர்கிறது.
சரித்திரப் பாடங்களில் அரசர்கள் ஆண்ட காலத்தின்
தேதிகள் முதல், பௌதீகம், ரசாயனம், கணிதம்
ஆகிய பாடங்களின் வாய்ப்பாடுகளையும்,
ஃபார்முலாக்கள் எனப்படும் கணக்கீடுகளையும்,
பூகோள பாடத்தில் நாடுகளின் எல்லைகளான
மத்திய ரேகை முதல் கடக ரேகை, மகர
ரேகை வரையிலும், தாவரங்கள் மற்றும்
மிருகங்களின் லத்தீன் பெயர்களையும் மனப்பாடம்
செய்து, பரீட்சையில் எழுதும் மாணவர்களின்
தேர்ச்சியே அன்று முதல்
இன்று வரை தொடர்கிறது எனலாம்.
ஆனால் வளர்ந்து வரும் உலகக் கல்வியின்
தரத்தை நம் நாட்டிலும் உருவாக்க, இந்த மனப்பாட
முறை போதுமா என்றால், இல்லை என்ற பதில்தான்
வரும். இந்தக் கல்வி முறையை உடனே மாற்ற
வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இன்றைய
உலகம் ‘இன்ஃபர்மேஷன் ஏஜ்’ எனும் தகவல் யுகமாக
மாறிவிட்டது. நிறையப் புத்தகங்களில் உள்ள பல
வகையான தகவல்களை மாணவர்கள் இன்டர்நெட்டின்
உதவியுடன் 24 மணிநேரமும் கற்றுக் கொள்ள
முடியும்.
பள்ளி மாணவர்களுக்குக் கூட
கம்ப்யூட்டர்களை இயக்கி நிறைய தகவல்களைச்
சேகரித்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுத்
தருவதை வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் நவீன
பாடத் திட்டங்களாக
உருவாக்கி நடைமுறைப்படுத்தப்
படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில்
படிக்கும் எனது பேரன், தனது வீட்டுப்
பாடத்தை படித்துக் கொண்டிருக்கும்போது,
மறுநாள் வகுப்பிற்கு சில கேள்விகளுக்கான
பதில்களைத் தயார் செய்து கொண்டிருந்தான்.
‘உனக்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்
என்னிடம் கேள்’ என்று நான் கூறினேன்.
‘தாத்தா, உங்களுக்கு எங்களுக்கு கேட்கப்பட்ட
கேள்விகளுக்கான பதில் தெரியாது’ என்றான். ‘அட,
அப்படி என்ன கேள்வி? ஒரு கேள்வியைக் கேள்,
பார்ப்போம்’ என்று நான் கூறினேன்.
‘சரி, கென்யா நாட்டின் மிகச் சுவையான
உணவு எது?’ என்ற கேள்வியை அவன் கேட்க, நான்
அசந்து போய் ‘இது எனக்குத் தெரியாது’
என்று கூறி, ‘இது போன்ற கேள்வி எந்தப் பாடத்
திட்டத்தில் வருகிறது?’ என்பதைக் கேட்டேன்.
பூகோள பாடத்தில் அந்தக்
கேள்வி வருகிறது என்றும், இதுபோன்ற
கேள்விக்கு பூகோளம் பற்றிய புத்தகத்தில் பதில்
கிடைக்காது என்றும் அவன் கூறினான்.
அவனது லேப்டாப்பை உபயோகித்து, ‘கூகுள்’
எனப்படும் தேடுதல் யுக்தியை உபயோகிக்க
குறிக்கப்பட்டுள்ள இடத்தில் ‘கென்யா’ என்று டைப்
செய்து இயக்கினால், அந்த நாட்டைப் பற்றிய
தகவல்கள் கிடைக்கும்.
அங்கே ‘உணவுகள்’ என்ற தலைப்பின் கீழ் செல்ல,
மிகவும் சுவையான உணவு எது என்ற தகவல்
கிடைக்கும். இதைப் பதிலாக எழுதி மறுநாள்
வகுப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆக,
சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகித்து ஒரு
தகவலைச் சேகரிக்கும்
திறமையை மாணவர்களுக்கு வளர்த்து விடும் பாடத்
திட்டமே இது! கல்வியின் அடிப்படை அம்சங்கள்
கற்றலும், கற்றதை சிந்தனையில் ஏற்றிக் கொள்வதும்
ஆகும்.
அதாவது ‘லேர்னிங்’ மற்றும் ‘திங்கிங்’
என்று ஆங்கிலத்தில் கூறப்படும்
இரண்டு அம்சங்கள் அவை. உயர் கல்வி பயிலும்
மாணவர்களுக்கு இந்த இரண்டு அம்சங்களுடன்,
ஆராய்ச்சி என்ற மூன்றாவது அம்சமும்
சேர்ந்தால்தான் தரமான கல்வி கிடைக்கும்
என்று கூறலாம்.
மேலைநாடுகளில் இந்த மூன்று அம்சங்களையும்
இளம் வயதிலேயே மாணவர்களுக்குப் போதிக்கும்
வகையில், ஆரம்பக் கல்வியின் பாடத் திட்டங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள, மாணவர்கள்
தாங்களாகவே முயற்சி செய்யும் பழக்கத்தையும்,
குணாதிசயத்தையும் உருவாக்க வேண்டும்
என்பது கல்வியாளர்களின் அறிவுரை.
உலகின் முதல் தரமான கல்வித்
திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமெரிக்காவில்,
பள்ளியின் இளம்
மாணவர்களை மிருகக்காட்சி சாலைகளுக்கும்,
அருங்காட்சியகங்களுக்கும், மீன்
காட்சியகங்களுக்கும், பூந்தோட்டங்களுக்கும்
அழைத்துச் சென்று பாடங்களை நடத்துகிறார்கள். பல
மிருகங்களையும், மீன்களையும், பூக்களையும்,
பழங்களையும், தாவரங்களையும்
காட்டி விளக்குகிறார்கள்.
புத்தகங்களில் இது போன்றவற்றைப் படிக்கும்
இளம் மாணவர்களை விடவும், நேரில் பார்த்து பல
அரிய சந்தேகங்களை ஆர்வத்துடன்
ஆசிரியர்களிடம் பதில் கேட்டுத்
தெரிந்து கொள்வதும், சக மாணவர்களுடன்
விவாதிப்பதும் மாணவர்களுக்குக் கற்றல்,
சிந்தித்தல், ஆராய்தல் என்ற
மூன்று குணாதிசயங்களையும்
உருவாக்குகிறது என்று அமெரிக்கா கல்வியாளர்கள்
கூறுகின்றனர்.
இங்கு இது போன்ற விஷயங்களைப்
பற்றி எண்ணுவதற்கே இன்னமும்
நமது கல்வியாளர்கள் ஆரம்பிக்கவில்லை. மாநில
அரசின் கல்வித் துறை உயரதிகாரிகள் இதைப்
பற்றி எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை.
பள்ளிக் கல்வி, மாநிலங்களின் நிர்வாகத்தின் கீழ்
வருகிறது. பள்ளிக்குச் சரியான நேரத்தில்
வந்து கவனத்துடன் மாணவர்களுக்குப் பாடம்
சொல்லிக் கொடுக்கவே, அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர்கள் முயலவில்லை என்ற உண்மையும்,
தனியார் பள்ளிகள் வியாபார ரீதியில்
நடைபெறுகின்றன என்பதும் நமது தலைவர்களால்
கவனிக்கப்படவில்லை.
இந்த நிலை சரி செய்யப்பட்டு, நவீன முறையில்
கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற
ஆசை, இன்னும் சில தலைமுறைகளுக்குக் கூட
நிறைவேறாது என்பதை நம் உள் மனது சொல்கிறது.

No comments:

Post a Comment